×

அக்.31ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரத்துக்கு 50 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வருகிற அக்.31ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜூலை 13ம் தேதி உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக, கோவிட் -19 க்கு எதிரான எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, தமிழகத்துக்கு போதுமான கோவிட் தடுப்பூசிகளை வழங்கிய ஒன்றிய அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளின் காரணமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட  தடுப்பூசிகள், இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்துள்ளது. வழக்கமான தினசரி தடுப்பூசி செலுத்துவதற்கு மேலதிகமாக, இரண்டு மெகா தடுப்பூசி முகாம்களும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 12ம் தேதி தகுதிவாய்ந்த 28.91 லட்சம் நபர்களுக்கும், கடந்த 19ம் தேதி தகுதியான மேலும் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 4 கோடிக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 19 நாட்களுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி வழங்கப்பட்டும் மக்களுக்கு போடப்பட்டும் உள்ளது. தடுப்பூசிகளின் வேகம் அதிகரித்த போதிலும், தனிநபர் தடுப்பூசி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகக் குறைந்த அளவுகளைப் பெற்று வருவதால், மாநிலம் இன்னும் தேசிய சராசரிக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படாவிட்டால், தமிழகம் எப்போதும் தேசிய சராசரிக்கும் கீழேயே இருக்கும். இந்திய அரசு கடந்த 19ம் தேதி வரை 3.97 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி மற்றும் 2.21 கோடி (0.5 மிலி) ஏ.டி சிரிஞ்ச்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

ஒவ்வொரு 10 மிலி குப்பியிலிருந்தும் அதிக டோஸ் பெறுவதன் மூலம், அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் 4.13 கோடி நபர்களுக்கு தடுப்பூசி போட முடிந்தது. ஆனால் இன்னும் தகுதியான மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. மாநிலத்தின் திறன் மற்றும் தகுதியுள்ள மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தினசரி தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகைய மெகா தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்வதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. தடுப்பூசி திட்டத்தின் முதல் நான்கு மாதங்களில் குறைந்த அளவிலான தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் அதை சமாளிக்க இது போன்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மட்டுமே எங்களுக்கு உதவும்.

ஒரு நாளைக்கு 5 லட்சம் டோஸ் என வாரத்திற்கு ஆறு நாட்களும் மற்றும் வாரத்தின் 7வது நாளில் ஒரு மெகா முகாமிற்கு 20 லட்சம் டோஸ் என எங்கள் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு வாரமும் 50 லட்சம் தடுப்பூசி மருந்துகளை செலுத்துவதற்கு அரசுக்கு திறன் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கூடுதல் டோஸ் பெறவும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெறவும் எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனவே, ஒவ்வொரு வாரமும் மாநிலத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகளையும், 0.5 மில்லி ஏடி சிரிஞ்ச்கள் அல்லது 1 மிலி / 2 மிலி சிரிஞ்ச்களையும் கூடுதலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் அக்டோபர் 31ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்கும். இது குறித்து நீங்கள் நேரடியாக தலையிட விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  தடுப்பூசிகளின் வேகம் அதிகரித்த போதிலும், தனிநபர் தடுப்பூசி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகக் குறைந்த அளவுகளைப் பெற்று வருவதால், மாநிலம் இன்னும் தேசிய சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin's letter to the Prime Minister:
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...