புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நிறைமணி காட்சி: 3 நாட்கள் நடக்கிறது

பூந்தமல்லி: ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் நிறைமணி காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் கோயில் கருவறை மற்றும் முன்பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கட்டி பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதுபோலவும் காட்சியளித்தது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழைபெய்து செழிக்கவும், ஜீவராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும். இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது. சுமார் 5 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள், ஆராதனைகளும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நிறைமணி தரிசன காட்சி விழாவில் கோயில் இணை ஆணையர் லட்சுமணன் தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஏ.கே.எஸ்.சரவணன், ஏ.கே.எஸ்.குமார், டி.ஜெயக்குமார், ஆனந்தசுவாமிகள், புஷ்பலிங்கம், கோவி.அருணகிரி, ஏ.ஜி.எஸ்.சுரேஷ், பொன்ராஜ், பாபுசேகர், கயிலாசம், மாரிமுத்து, கோயில் பேஷ்கர்கள் அண்ணாமலை, மலைச்சாமி, சுப்பிரமணி, சுந்தரி, கோயில் தலைமை குருக்கள் மணிகண்டன், ஸ்ரீதர், சூரஜ், சரவணன், ஜெயகோபால், தமிழ்செல்வன், புவனேஸ்வரன், ஸ்ரீதர், என்.தாண்டவமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை ஆர்வமுடன் செல்போனில் படம் எடுத்துக்கொண்டனர். 

Related Stories:

More
>