கொளத்தூரில் அங்கன்வாடி, ரேஷன் கடை, பூங்கா திறப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அங்கன்வாடி, ரேஷன்கடை, பூங்கா ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன்படி, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 69வது வார்டு மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் மேரிஸ் கல்லூரி அருகே, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 68வது வார்டு பல்லவன் சாலை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். 65வது வார்டு சீனிவாசா நகர் 3வது குறுக்கு தெருவில் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார். ஜிகேஎம் காலனி 30வது தெருவில் 120 கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 66வது வார்டு பெரியார் நகர் மேல்நிலைப்பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ மாணவியருக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, தனது சட்டமன்ற அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  கல்வி உதவித்தொகை, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். பின்னர், மருத்துவ உதவி, திருமண உதவி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மீன்பாடி வண்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, தாயகம் கவி எம்எல்ஏ, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை சேர்ந்த நரேந்திரன், எலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* இளம்பெண் உருக்கம்

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய ஸ்வேதா (24), ‘எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் விபத்தில் இறந்துவிட்டார். குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்ட போது, இந்த அகாடமியில் சேர்ந்து கணினி பயிற்சி முடித்து தற்போது நான்  வேலைக்கு செல்கிறேன். சொந்த காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையை இந்ந அகாடமி எனக்கு கொடுத்துள்ளது. என்னை போன்று பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் இந்த அகாடமியின் மூலம் நல்ல வாழ்க்கையை பெற்றுள்ளனர்,’ என கண்ணீர் மல்க பேசினார்.

Related Stories:

More