மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி

மேலூர்: மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சி வழங்கப்பட்டது. மேலூர் அருகில் உள்ள கம்பூர் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்துவது, கிராம இளைஞர்களை கொண்டு இயற்கை வளத்தை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகளை நடுவது என பல்வேறு நிகழ்ச்சிகளை இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 கொரோனா ஊரடங்கால் சற்று தங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருந்த இவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பூர் கிராம அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அடிப்படை ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சியை நேற்று வழங்கினர். இதற்காக சென்னையில் இருந்து வந்த ஓவியர் சிலம்பொலி என்ற கண்ணன் விளக்கம் அளித்தார்.  இயற்கை காட்சிகள், பறவைகள், தேச தலைவர்கள் படங்களை வரைவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முதலில் மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர்.

சிறந்த ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட படங்களில் வண்ணம் தீட்டுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கம்பூர் மாலை நேர வகுப்பு பயிற்சியாளர்கள் சத்யா, கேசம்பட்டி பாரதிதாசன், ஜீவா, பெரியசாமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் குழு ஒருங்கிணைத்தது.

Related Stories: