×

மதுரையில் கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்கள் வேருடன் பிடுங்கி இடமாற்றம்

மதுரை: மதுரை கலைஞர் நூலகம் கட்டிடம் அமையவுள்ள இடத்தில் இருந்து 15 மரங்கள் வேருடன் பிடுங்கி அதேபகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள இடத்தில் இருந்து 15 மரங்களை அதேபகுதியில் வேருடன் பிடுங்கி இடமாற்றம் செய்யக்கூடிய பணி தற்போது துவங்கியுள்ளது. சென்னையில் உள்ளது போன்றே மதுரையில் அதிநவீன வசதிகள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நூலகம் அமையவுள்ளது. இதனிடையே இந்த நூலகம் அமையவுள்ள பொதுப்பணித்துறை இடத்தில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. வேப்பமரம், புங்கமரம் மற்றும் உசிலை மரம் என பல மரங்கள் அந்த இடத்தில் இருக்கின்றன. இந்த மரங்கள் எல்லாம் 15 முதல் 50 வயது உடையவை. இந்த மரங்களை எல்லாம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. எனவே இந்த கட்டிட அமையவுள்ள இடத்தில் இருந்து அதேபகுதியில் கட்டிடம் வராத மீதமுள்ள இடத்திற்கு தற்போது அந்த 15 மரங்களை வேருடன் எடுத்து மாற்றுகின்ற பணி தொடங்கியுள்ளது.

வேப்பமரம், வில்வமரம், உசிலைமரம் போன்ற இந்த மரங்களை எல்லாம் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக அதனுடைய கிளைகள் எல்லாம் முழுமையாக அறுக்கப்பட்டு அந்த இடத்தில் சாணி மற்றும் சாக்குகள் வைத்து கட்டப்பட்டன. அதேபோன்று வேர்களும் தயார் படுத்தப்பட்டு முழுமையாக அந்த மரம் இருந்த இடத்தில் தாய் மண்ணுடன், பொக்லைன் மற்றும் கிரேன் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்பட்டு புதிய இடத்தில் நடப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமையான பகுதியிலேயே இந்த கட்டிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய நோக்கம். அந்த அடிப்படையில் கட்டிடம் அமைவதால் மரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : Maduro , Madurai, Kalaingar Library
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...