×

வேலூர் மாவட்டத்தில் 343 இடங்களில் சிறப்பு முகாம் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் 343 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. இதில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.நாட்டில் கொரோனா 3வது அலை அச்சம் நிலவும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12ம்தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் நடந்த 40 ஆயிரம் முகாம்களில் 28.91 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் வரும் அக்டோபர் 1ம்தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட 20 ஆயிரம் மையங்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி மாலை 7 மணி வரை நடந்தது.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 343 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது. இதில் மாநகராட்சியில் மட்டும் 80 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. முகாமை வேலூர் காந்தி ரோட்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கொரோனா பரவலை தடுப்பதில் தமிழகம் முன்னோடியாக விளங்கி வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் இன்று (நேற்று)நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகர நல அலுவலர் மணிவண்ணன், 2வது மண்டல சுகாதார அலுவலர் மதிவாணன், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில் மொத்தம் 15,083 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவிஷீல்டு பற்றாக்குறை

தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி ெசலுத்தும்  நடவடிக்கையில் கோவாக்சின் மட்டுமே பற்றாக்குறையாக சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கோவிஷீல்டு முதல் டோஸ் போட வந்த பெரும்பாலானவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். கோவிஷீல்டு தடுப்பூசி குறைந்த சப்ளையே நடப்பதாக கூறி திருப்பி அனுப்பினர். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் தடுப்பூசிகளின் சப்ளையில் எவ்வித இடர்பாடும் இல்லாத வகையில் அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் போதிய அளவில் சப்ளை செய்யப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore district ,Corona , Vellore: A corona vaccination mega camp was held at 343 places in Vellore district yesterday to completely prevent the spread of corona.
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்