சோழவந்தான் பகுதியில் நீரோடும் வைகை ஆறு புதராய் மாறிய அவலம்-பொதுப்பணித்துறை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு புதர் மண்டிக் கிடப்பதை சீரமைக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு வறட்சியில் கூட ஓரளவு நீர்ப்பிடிப்புடன் காணப்படும். சில வருடங்களுக்கு முன் ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில் ஓடுகால் எனும் பள்ளம் அமைத்து அதில் வரும் நீரூற்றைப் பயன்படுத்தி குளிப்பார்கள்.

இதமான இயற்கை காற்றை சுவாசிப்பதற்காகவே மாலை நேரங்களில் கூட்டமாக வைகையில் அமர்ந்து பெரியவர்கள் பேசி பொழுதை போக்கி மகிழ்வார்கள். ஆனான்,ல தற்போது தெள்ளிய நீரோடிய வைகையில், பல இடங்களில் கழிவுநீர் கலந்து மாசுபட்டு வருகிறது. வெட்ட வெளியாக இருந்த வைகை புதர் மண்டி காடுகள் போல காட்சி தருகிறது.

இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களின் கூடாரமாகவும் வைகை ஆறு மாறி வருகிறது. எனவே இயற்கையான மண்ணையும்,மக்களையும் பாதுகாக்க குருவித்துறை, மன்னாடி மங்கலம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், தென்கரை, திருவேடகம், மேலக்கால், கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், கோச்சடை வரையிலான வைகை ஆற்றை தூர் வாரி நாணல், சீமைக்கருவேல் உள்ளிட்ட புதர்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சோழவந்தான் முருகன் கூறுகையில், `` வைகை கரையில் உள்ள சோழவந்தான் பகுதி வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மிக பூமியாகும். குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள், குரு பகவான், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், ஜெனக நாராயண பெருமாள், சனீஸ்வர பகவான், திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு ஆலயங்களின் விழாக்கள் அனைத்துமே வைகை நதி சார்ந்தவைதான். தேனி மாவட்டத்தில் வெளியேறி ராமநாதபுரம் கடலில் கலக்கும் வரை வைகை மேற்கிலிருந்து கிழக்கு திசையில் தான் ஓடும்.

ஆனால், சோழவந்தான் முதல் மேலக்கால் வரை சுமார் 10 கி.மீ தூரம் வரை மட்டும் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஓடும். இதனால் இங்கு நீராடினால் பல்வேறு பாவங்கள், தோஷங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த வைகையில் நாணல் செடிகளும், கோரைப் புற்களும், சீமைக்கருவேலும் அதிகம் வளர்ந்து அடர்ந்த வனமாய் காட்சியளிக்கிறது. ஒரு கரையிலிருந்து மறுகரைப் பகுதி குடியிருப்புகளுக்கு இரவில் கூட முன்பு பயமின்றி பொதுமக்கள் சென்று வந்தனர்.

ஆனால், தற்போது பகலில் செல்வதற்கே அச்சப்படுமளவிற்கு ஆபத்தான புதர்களாக பாதுகாப்பின்றி உள்ளது. மேலும் பல இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலந்து மாசுபடுகிறது.

எனவே புதர்களை அகற்றி, கழிவுநீர் கலப்பதை தடுத்து வைகையை தூய்மையாக மீண்டும் மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories:

More
>