ஆண்டிபட்டி பாலாஜி நகரில் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்-குழாயை மாற்றி அமைக்க மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாலாஜி நகரில் கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் அமைந்துள்ளதால், இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாயை மாற்றி அமைக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், ஜம்புலிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டிபட்டி பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாலாஜி நகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் வரும் குழாய், சாலையோரம் செல்லும் கழிவுநீர் கால்வாய் வழியாகச் செல்கிறது. இதில், குடிநீர் குழாய் அமைந்துள்ளதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. இந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கழிவுநீர் அதிகளவு குடிநீர் குழாயில் கலக்கிறது. எனவே குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், மர்மக் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த குழாயை மாற்றி அமைக்க பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

More
>