×

இந்தியாவில் கோவிட் பலி எண்ணிக்கை அரசு கூறுவதை விட 14 மடங்கு அதிகம்?: நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியால் அதிர்ச்சி..!!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூடுவதை காட்டிலும் 14 மடங்கு இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  உண்மையான எண்ணிக்கை எவ்வளவு என்ற தலைப்பில் இந்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி பிரசுரம் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 2 கோடியே 69 லட்சம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் என குறிப்பிட்டுள்ளது. 
ஆனால் உண்மையில் இந்தியா முழுவதும் 70 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. குறைந்தது 42 லட்சம் பேர் தொற்றால் இறந்திருக்கலாம் என்றும் இது இந்திய அரசு சொல்வதை விட 14 மடங்கு அதிகம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 12க்கும் மேற்பட்ட தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வில் இந்த திடுக்கிடும் புள்ளி விவரங்கள் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல், தரவுகளை பாதுகாப்பதில் உள்ள சுணக்கம் மற்றும் நாடு தழுவிய அளவில் நடைபெறாத பரிசோதனை ஆகியவையே இந்த தவறான தகவலுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுவதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. பொதுவாகவே இந்தியாவில் நிகழும் 5 மரணங்களில் 4 மரணங்களுக்கான மருத்துவ காரணங்கள் கண்டறியப்படுவதில்லை என கூறும் நிபுணர்கள், வீடுகளில் நிகழும் மரணங்களை இந்திய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. 

The post இந்தியாவில் கோவிட் பலி எண்ணிக்கை அரசு கூறுவதை விட 14 மடங்கு அதிகம்?: நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : India ,New York Times ,United States ,
× RELATED இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை