×

நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் விஷ ஜந்துகளுக்கு மத்தியில் பணியாற்றும் ஊழியர்கள்-உயிருக்கு ஆபத்து உள்ளதாக அச்சம்

நாகை : நாகை மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் விஷ ஜந்துக்கள் மத்தியில் பணியாற்றுவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அச்சத்தில் உள்ளனர்.நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் குறுவை சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பல லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அரவைக்காக ரயில் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அரவைக்காக பிற மாவட்டங்களுக்கு செல்லும் வரை திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளிலேயே நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாகை மண்டலத்தில் 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் வரை சேமிக்கப்படும் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் பணியாற்ற 3 தர கட்டுப்பாட்டு அலுவலர், 1 இளநிலை உதவியாளர், 6 வாட்ச்மேன்கள் இருக்க வேண்டும். ஆனால் நாகை முதுநிலை மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள நாகை மாவட்டத்தில் அருந்தவம்புலம், வி.டி.பி.மைதானம், சன்னமங்கலம், சாட்டியக்குடி, திருப்பூண்டி என 5 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வானதிராஜபுரம், கடலங்குடி, உலகப்பாடி, சேந்தங்குடி, மணல்மேடு, பெருஞ்சேரி, பூந்தாழை என 7 இடங்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் தலா 1 தர கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் 1 வாட்ச்மேன்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவ்வாறு இரவு, பகலாக பணியாற்றும் இவர்களுக்கு 10 அடி சுற்றளவில் அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகை தான் அலுவலகம் செயல்படுகிறது. அலுவலகம் மட்டும் இன்றி தங்குமிடமும் இதுதான். ஆனால் மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகள் என எதுவும் இந்த கீற்றுகொட்டையில் கிடையாது. திறந்தவெளி சேமிப்பு கிடங்காக பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட கீற்றுக் கொட்டைகளிலேயே வசிக்க வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளை கடந்த காரணத்தால் அந்த கீற்று கொட்டகையும் சிதிலமடைந்து விஷ ஜந்துக்களின் வசிக்கும் இடமாக மாறியுள்ளது.

பல ஆயிரம் மெட்ரிக் டன் நெல் முட்டைகளை பாதுகாக்கும் இரவு நேர காவலர்களுக்கு டார்ச் லைட் வசதி கூட நிர்வாக தரப்பில் செய்து தரப்படாமல் உள்ளது. நெல் மூட்டைகளை தரம் செய்யும் தர கட்டுப்பாட்டு அலுவலர் மழைக்காலங்களில் ஒதுங்க இடம் கூட இடம் இல்லாமல் நெல் மூட்டைகளுக்கு போர்த்தப்படும் தார்ப்பாய்களை போர்த்திக் கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என உயிர் பயத்தில் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து திறந்த வெளி சேமிப்பு கிடங்கு ஊழியர்கள் கூறுகையில் நான்கு புறமும் கீற்றால் அடைக்கப்பட்ட இடத்தில் தான் 24 மணி நேரமும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

மழை காலங்களில் சேதமடைந்த கீற்று கொட்டைகள் வழியாக விஷ ஜந்துக்கள் குடியேறி விடுகிறது. நெல் மூட்டைகளை சேதப்படுத்த இரவு நேரங்களில் உள்ளே வரும் பன்றிகளை விரட்ட நாங்கள் வைத்திருக்கும் செல்போன் வெளிச்சத்தில் தான் செல்ல வேண்டியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து பல ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அதை திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் பல மாத காலமாக பாதுகாப்பாக வைத்து அரவைக்கு அனுப்பும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. உயிர் பயத்திலேயே பணியாற்றும் எங்களுக்கு நிர்வாக தரப்பில் மின் வசதியாவது செய்து தர வேண்டும் என்றனர்.

Tags : Consumer Trade Corporation , Nagai: Employees working in the open storage warehouse of the Tamil Nadu Consumer Goods Corporation in the Nagai region among the poisonous animals
× RELATED தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்...