×

அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி மூலம் மட்டுமே தொன்மை மாறாமல் கோயில்களில் புனரமைப்பு பணிக்கு வரைபடம் தயார் செய்ய வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: ெதான்மை மாறாமல் கோயில்களில் புனரமைக்கும் பணிக்காக வரைப்படம் தயாரித்து கொடுக்கும் ஸ்தபதிகளுக்கு மதிப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு புனர் நிர்மானம் செய்யும் பொருட்டு உரிய அளவுடன் வர்க்க அலங்காரங்கள், கால்புறவாய் அளவு, அங்க அலங்காரத்தின் படி மரபு மாறாமல் திருப்பணி மேற்கொள்ள உள்ளது. பழமைமாறாமல் அப்படி பணிகளை மேற்கொள்வதற்கான வரைப்படம் தயாரிக்க மண்டல ஸ்தபதி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதிகளை கொண்டு வரைபடம் தயார் செய்யப்படுகிறது.

இப்பணிகளுக்கான கட்டணம் ஒரே அளவாக நிர்ணயம் செய்ய வேண்டிய அவசிய நிலையில் மதிப்பூதியமாக வழங்கிடலாம் என்று மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு நிலை விமானம் அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் ஒரு பிரகாரத்துடன் வரைந்து சமர்ப்பிக்க ரூ.5,000, தரைப்படம், வெட்டுத்தோற்றத்துக்கு ரூ.1000, இரண்டு மற்றும் மூன்று தள விமானத்துக்கு ரூ.6,000, பக்கத்தோற்றத்துக்கு ரூ.1,800, வெட்டுத்தோற்றம், தரைப்படத்துக்கு ரூ.1800, மூன்று தளம் முதல் 12 தளம் வரை பக்கத்தோற்றத்துக்கு ரூ.7,500, வெட்டுத்தோற்றம், வரைப்படம் வரைவதற்கு ரூ.3,750, திருச்சுற்று ஆலயங்களுக்கு ரூ.1,100, கோபுரம் 1 முதல் 3 தளத்தை வரைவதற்கு முன் முகத்தோற்றம், பக்கத்தோற்றம் வரைப்பட மதிப்பூதியம் ரூ.5000, வெட்டுத்தோற்றம் மதிப்பூதியம், தரைப்படத்தோற்ற மதிப்பூதியம் ரூ.1000 உள்பட வரைப்பட பணிகளுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும்.

இத்துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதிகளுக்கு சம்பந்தப்பட்ட கோயில் நிதியில் இருந்து வழங்குவதற்கு அனைத்து கோயில் நிர்வாகிகள், செயல் அலுவலர்கள், தக்கார்கள், சரக ஆய்வர்கள் மற்றும் அந்தந்த மண்டலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்தபதிகளுக்கு தெரிவித்திட அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாணை தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஸ்தபதிகளுக்கும் பொருந்தும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sthapati , Government Recognition, Sthapati, Commissioner of Temples, Reconstruction and Charities
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...