×

கொரோனா 3வது அலையை தமிழகம் எதிர்கொள்ளும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொள்ளாச்சி: கொரோனா 3வது அலை வந்தாலும் அதை தமிழகம் எதிர்கொள்ளும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் உற்பத்தி இயந்திர துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 2வது மெகா தடுப்பூசி முகாமையும் அவர் துவக்கி வைத்தார். இதையடுத்து, தமிழக கேரள எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே நடந்த 2வது மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி
தமிழகத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.கோவை மாவட்டத்தில் 2வது தவணை தடுப்பூசி 25 சதவீதம் போடப்பட்டு அதிலும் முதலிடத்தில் உள்ளது.  இங்கு தினசரி தொற்று 200 ஆக குறைந்துள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வாகனங்களில் வரும் அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிபா, ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணி சுகாதார துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை தமிழகம் எதிர்கொள்ளும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்தந்த துறை வாரியாக அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.



Tags : Corona ,TN ,Minister ,Subramanian , Corona, Tamil Nadu, Minister Ma. Subramanian
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...