×

கடலூரில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடியின் மனைவி சரமாரி வெட்டிக்கொலை: பலருக்கு காதல் வலை விரித்ததில் 3 கொலைகள்; திடுக்கிடும் தகவல்

கடலூர்: கடலூர் குப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காந்திமதி (27). பிரபல ரவுடியாக இருந்த கிருஷ்ணன் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். தனியாக வசித்து வந்த காந்திமதி, கணவர் மீதான வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல்கள் வருவதாக எஸ்பியிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்த்துவிட்டு காந்திமதி வீடு திரும்பி கொண்டிருந்தார். கம்மியம்பேட்டை சீனிவாசன் நகர் அருகே வந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் காந்திமதியை வழிமறித்து, கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காந்திமதியை,  ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர்  கவிதா தனது ஜீப்பில் ஏற்றி சென்று மருத்துவமனையில்  சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் நள்ளிரவில் 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திரில்லர் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கடலூர், திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் வீரா. இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த காந்திமதியை காதலித்துள்ளார். அப்போது காந்திமதி, கடலூரிலேயே பெரிய ரவுடியாக வீரா இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 16 வயது சிறுவனை கொன்று வீரா, கடலூர் நகரத்தில் தாதாவாக உருவெடுத்தார். இந்த சமயத்தில் அவரது நண்பர் கிருஷ்ணனுடன் காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. காதல் போட்டி காரணமாக வீராவுக்கும், கிருஷ்ணனுக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், வீரா தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அருகே கிருஷ்ணனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்குகள் தொடர்பாகத்தான் காந்திமதியை சிலர் மிரட்டி வந்ததாக போலீசாரிடம் புகார் அளித்து வந்துள்ளார். இதனிடையே கிருஷ்ணனுடன் இருந்த நண்பர் அரவிந்தனுடன் (23) காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடலூர் ஆலப்பாக்கம், கும்பகோணம் ஆகிய இடங்களை சேர்ந்த சிலருடனும் காந்திமதி தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது அரவிந்தனுக்கு தெரியவந்ததால், காந்திமதியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காந்திமதி அரவிந்தனை கொலை செய்யுமாறு, தனது காதலர்கள் சிலரை ஏவியுள்ளார்.

 இந்த தகவல் அரவிந்தனுக்கு வரவே அவர் முந்திக்கொண்டு, காந்திமதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.அதன்படி காந்திமதியின் உறவினரும், தனது நண்பருமான ஆறுமுகம், சக்தி, மதன் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு காந்திமதி மருத்துவமனைக்கு சென்று திரும்பும் வழியில் வழிமறித்து கத்தி, அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து அரவிந்தன் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பலருடன் ஏற்பட்ட காதல் விவகாரம்  மூன்று பேர் கொலையில் முடிந்துள்ளது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cuddalore , Cuddalore, Encounter, Famous Rowdy, Murder
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!