×

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேரும் திரும்பினர்: 3 நாள் சாதனை பயணம் வெற்றி

கேப் கேனவரல்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 நாள் சுற்றுலா சென்ற 4 பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம், முதல் முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திரும்பிய வரலாற்று சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தக ரீதியான பயணத்தை தொடங்க ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆர்ஜின் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது விண்கலத்தை விண்வெளிக்கு ஏவி வெற்றிகரமாக சோதனையை முடித்துள்ளன.

இதைத் தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ‘டிராகன் கேப்சூல்’ விண்கலத்தை கடந்த வியாழக்கிழமை விண்வெளிக்கு அனுப்பியது.  ‘இன்ஸ்பிரே‌ஷன்-4’ என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பயணித்தனர். இவர்கள் 4 பேரும் தொழில்முறை விண்ெவளி வீரர்கள் கிடையாது;  சாதாரண பொதுமக்கள்தான். திட்டமிட்டபடி, கடந்த 3 நாள்களாக பூமியைச் சுற்றி வந்த விண்வெளி பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

கேப்சூல் வடிவிலான டிராகன் விண்கலம் முழுக்க முழுக்க தானியங்கி முறையிலானது. இது, 585 கிமீ உயரத்தில் இருந்து, அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்தது. 4 பாராசூட்கள் மூலமாக விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது. உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன படகுகள் மூலம் கேப்சூல் மீட்கப்பட்டு, அதிலிருந்து விண்வெளி பயணிகள் 4 பேரும் பத்திரமாக வெளியே வந்தனர். அவர்கள் முழு உடல் நலத்துடன் இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆட்டுக்கறி சாப்பிட்டபடி பூமியை ரசித்த பயணிகள்

* கடந்த 1969ம் ஆண்டு அப்பல்லோ 9 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் புவி ஈர்ப்புவிசையை தாண்டி முதல் முறையாக விண்வெளியில் அடியெடுத்து வைத்தனர். அதன்பிறகு, விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மனிதர்கள் தற்போது முறையாக விண்வெளியில் பயணம் செய்துள்ளனர்.
* தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பி வரலாற்று சாதனை படைத்தது.
* இந்த பயணத்தில் வழக்கமான விண்வெளி வீரர்களுக்கான உணவு வகைகளும் இடம் பெறவில்லை. மாறாக, குளிர்ந்த பீட்சா, சான்ட்விச், பாஸ்தா, ஆட்டுக்கறி ஆகிய உணவுகளை விண்வெளி பயணிகள் ருசித்துள்ளனர்.
* ப்ளூ ஆர்ஜின், விர்ஜின் கேலக்டிக் நிறுவனங்கள் சில நிமிடங்களே விண்வெளி பயணத்தை நடத்திய நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்வெளி சுற்றுலா 3 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.
* இந்த பயணத்தின் மூலம் ரூ.1500 கோடி நிதி திரட்டப்பட்டு அது குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக தரப்பட்டுள்ளது.

‘விண்வெளி பயணம் இனி எல்லாருக்குமானது’
* ‘விண்வெளி என்பது விண்வெளி  வீரர்களுக்கு மட்டுமானதல்ல, அனைவருக்குமானது என்பதை இத்திட்டம் உலகிற்கு  எடுத்துக்காட்டி உள்ளது,’ என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.
* ‘இது  எங்களுக்கான சவாரி… இது வெறும் தொடக்கம்தான். இதுபோன்ற விண்வெளி பயண  திட்டங்கள் இன்னும் ஏராளம் வரும்,’ என பயணத்தை முடித்து திரும்பிய  கோடீஸ்வரர் ஐசக்மேன் கூறி உள்ளார்.

மலம் கழிப்பதுதான்பேஜாரா போச்சு...
* விண்வெளி சுற்றுலா பயணத்தின் போது, விண்கலனில்  கழிப்பறை மின்விசிறியும், வெப்பநிலை சென்சார் கருவியும் சற்று பிரச்னை  செய்ததை தவிர வேறு எந்த பெரிய அளவிலான பிரச்னையும் ஏற்படவில்லை. புவி  சுற்றுப்பாதைக்கு திரும்பியதும் விண்கலனில் சிலருக்கு மலம் கழிப்பில்  பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இது, வழக்கமாக விண்வெளி வீரர்களுக்கும் ஏற்படக்  கூடியது பாதிப்புதான் என விஞ்ஞானிகள் கூறினர்.

Tags : SpaceX , Space X, spacecraft, space travel
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...