உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நிலுவையில் கிடக்கும் கொலிஜியம் பரிந்துரை: ஒன்றிய அரசு மந்தம்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிப்பது, வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பதவி வழங்குவது, இடமாற்றம் செய்வது குறித்து கொலிஜியம் அளித்த பரிந்துரையின் மீது ஒன்றிய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பது  போன்றவை குறித்து, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கிறது. இதன் அடிப்படையில், ஒன்றிய அரசு இந்த நியமனங்களை ஜனாதிபதி ஒப்புதலுடன் செய்து வருகிறது.

இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெயர்களை பரிசீலித்து இந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையில், 12 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதியாக நியமனம் செய்ய 68 பெயர்களை ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின்  நீதிபதியான ராஜேஷ் பிண்டால் உள்பட 8 நீதிபதிகளின் பெயர்களை பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. மேலும், 28 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 5 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் இடமாற்ற பரிந்துரைகளையும் வழங்கியது. ஆனால், இதுவரை கொலிஜியம் அளித்த பரிந்துரைகள் மீது ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

More
>