ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு விரைவில் அனுமதி: 5 லட்சம் பேருக்கு இலவச சுற்றுலா விசா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா துறை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது, கொரோனா பரவல் வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது. மேலும், நாட்டில் 80 கோடி தடுப்பூசி போடப்பட்டு விட்டதால், சுற்றுலா துறையை ஊக்குவிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசா அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும். இது குறைந்தகால சுற்றுலாவாக வரும் பயணிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது. ஒருமாத கால மின்னணு சுற்றுலா விசாவுக்கு ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்குதல், கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நாடுகளுக்கு தடையை நீட்டித்தல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளையொட்டி, நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதை ஒன்றிய அரசு பெருமையாக பேசி வரும் நிலையில், காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக கோவின் இணையதள வரைபடத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘சம்பவம் முடிஞ்சு போச்சு...’ என கிண்டலடித்துள்ளார்.

Related Stories:

>