மாஜி அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் திடீர் திருப்பம் கே.சி.வீரமணி மீது புதிய வழக்கு பாய்கிறது: பதுக்கப்பட்ட 551 யூனிட் மணல் பறிமுதல்; கலெக்டரிடம் கனிமவளத் துறை அறிக்கை

திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பதுக்கிய ரூ.60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் கனிம வளத்துறை அதிகாரிகள் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி அவர் மீது மணல் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து கடந்த 16ம் தேதி சென்னை, ஜோலார்பேட்டை, ஏலகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகளின் வீடு, நிறுவனங்கள், அலுவலகங்கள், வேளாண் கல்லூரி, ஸ்டார் ஓட்டல்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள், சொகுசு கார்கள், வெளிநாட்டு கரன்சிகள், தங்கம், வெள்ளி நகைகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சொத்து ஆவணங்களுடன், 2011ம் ஆண்டுக்கு முந்தைய அவரது சொத்து மற்றும் வருவாய் இனங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின்போது கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறம் மணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு லஞ்சஒழிப்பு போலீசார் அறிக்கை அளித்தனர். இதையடுத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா, கே.சி.வீரமணி வீட்டில் பதுக்கி வைத்துள்ள மணல் அளவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து போலீசார் மற்றும் தாசில்தார்சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மணலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த மணலை ஆய்வு செய்தனர். அதில் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மணலுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதுதொடர்பாக கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம், கனிம வளத்துறை அதிகாரிகள் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது  அவரது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் 23 லாரிகளில் பாலாற்றில் இருந்து  இரவு, பகலாக மணல் கடத்தி விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கும் கடத்தல் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கலெக்டர் உத்தரவின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட மணலை அளவிடும் பணி நடந்தது. அதில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்து உள்ளோம். மேலும் எதற்காக இந்த மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்.

இந்த விசாரணைக்கு பின்னரே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மணலை ஏலம் விடுவதா? அல்லது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வாணியம்பாடியில் போலீசார் நடத்திய சோதனையில் பதிவெண் இல்லாமல் இயங்கிய 5 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கே.சி.வீரமணி வீட்டில் மணல் பதுக்கியதால், அவர் மீது விரைவில் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சொத்து குவிப்பு ஆவணங்கள், பணம், நகைகள், வெளிநாட்டு பணம் சிக்கிய நிலையில், மணல் கடத்தல் வழக்கும் பாய்வதால் கே.சி.வீரமணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மணல்.

* லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின்போது கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறம் மணல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* ஆய்வு செய்த அதிகாரிகள் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்ததாக கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

* பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மணலை ஏலம் விடுவதா? அல்லது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து விரைவில் முடிவு.

Related Stories:

More