குறைந்த அளவே தடுப்பூசி; பவானிசாகரில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முற்றுகை: பொது மக்கள் வாக்குவாதம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே மெகா தடுப்பூசி முகாமில் 70 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடுவதாக கூறியதால்,  பொதுமக்கள் சுகாதாரத்துறை ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்  செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது. இன்று நடைபெறும் முகாமில் மாவட்டத்தில் மொத்தம் 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சியில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கடந்த 2 நாட்களாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பெரியகள்ளிப்பட்டி அரசு பள்ளியில் தொடங்கிய தடுப்பூசி முகாமுக்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த குவிந்தனர். முகாமிற்கு 70 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளதாகவும், 70 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 200 தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தண்டோரா மூலம் அறிவிப்பு செய்து விட்டு 70 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கினால் எப்படி?

என கேள்வி எழுப்பியதோடு 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என கூறி சுகாதாரத்துறை ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   இது குறித்து தகவலறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடுப்பூசி முகாமில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related Stories:

More
>