பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் விளைவை காங்கிரஸ் அனுபவிக்கும்: பாஜக கருத்து

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் விளைவை காங்கிரஸ் அனுபவிக்கும் என பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் முக்கிய திருப்பமாக ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரீந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அவருக்குப் பதிலாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படும் சுனில் ஜாக்கர் முதல்வராக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் பாஜக நிர்வாகி ரதோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் விளைவை காங்கிரஸ் அனுபவிக்கும். பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள் ஏற்படும். ராஜஸ்தான் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் தரப்பில் தலைவர் பற்றாக்குறையை காண முடிந்தது. 2022 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டன; அரசின் மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் ஏற்படுவது இயல்புதான்.

அமரீந்தர் சிங் ராஜினாமா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ராஜஸ்தான் முதல்வரின் தனி அதிகாரி லோகேஷ் தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனது கருத்து சர்ச்சை எழுந்ததால் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வரின் தனி அதிகாரி லோகேஷ் சர்மா பதவி விலகினார் இவ்வாறு ரதோர் கூறினார்.

Related Stories:

More
>