×

கொரோனா 3வது அலை வந்தாலும் தமிழகம் எதிர்கொள்ளும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

பொள்ளாச்சி: ‘‘கொரோனா 3வது அலை வந்தாலும் அதை தமிழகம் எதிர்கொள்ளும்,’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் உற்பத்தி இயந்திர துவக்க விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்தார். இதை அடுத்து  2வது மெகா தடுப்பூசி முகாமையும் துவக்கி வைத்தார்.

இதை அடுத்து தமிழக கேரள எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே நடந்த 2வது மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்த வாகனங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த வாரம் நடந்த முதலாவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் 40 ஆயிரம் இடங்களில் நடந்தது.

இன்று 2வது மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் முகாம்களில் நடந்து வருகிறது. கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது. தமிழக-கேரள எல்லை பகுதி கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் உள்ளன. அந்த வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருள் வாகன போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்ந்துள்ளது. இருப்பினும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வாகனங்களில் வரும் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிபா, ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணி சுகாதார துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒன்றிய அரசிடம், கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு வேண்டும் என தொடந்து கேட்டு வருகிறோம். கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை தமிழகம் எதிர்கொள்ளும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவதுறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்தந்த துறை வாரியாக அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Tamil Nadu ,Corona ,Minister Ma Subramaniam , Tamil Nadu will face the 3rd wave of Corona: Interview with Minister Ma Subramaniam
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...