துபாயில் இன்று சிஎஸ்கே-மும்பை மோதல்: புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

துபாய்: 14வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ம்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3ம் தேதியுடன் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

இதில் புதிய சாதனை படைக்க மும்பை கேப்டன் ரோகித்சர்மா காத்திருக்கிறார். டி.20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதுவரை 397 சிக்சர்கள் விளாசி உள்ளார். இன்று அவர் 3 சிக்சர் அடித்தால் 400 சிக்சர் இலக்கை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். ரோகித்சர்மா டி.20 போட்டிகளில் மொத்தமாக அடித்துள்ள 397 சிக்சரில் 224 சிக்சர் ஐபிஎல்லில் விளாசியது. இதில் மும்பை அணிக்காக மட்டும் 173 சிக்சர் விளாசி உள்ளார். மீதமுள்ள 51 சிக்சர் முதல் 3 சீசனில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அடித்தது.

இதை தவிர இந்திய அணிக்காக டி.20 போட்டிகளில் 133 சிக்சர் அடித்துள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரர்களில் சுரேஷ் ரெய்னா 324, விராட் கோஹ்லி 315, டோனி 303 சிக்சருடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக டி.20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித்சர்மா 8வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெயல், பொல்லார்ட், ரஸ்ஸல், பிரெண்டன் மெக்கல்லம், ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதல் 7 இடத்தில் உள்ளனர்.

துபாய் மைதானம் எப்படி?

இன்று போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் இதுவரை 93 டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 38ல் வென்றுள்ளன. 2வது பேட்டிங் செய்த அணி 54 போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 219 ரன் எடுத்துள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ரன் 155.

போட்டி கடும் சவாலாக இருக்கும்

இன்றைய போட்டி குறிதது மும்பை அதிரடி பேட்ஸ்மேன் இஷான்கிஷன் அளித்துள்ள பேட்டி: நாங்கள் நன்றாக தயாராகி வருகிறோம். ஏனென்றால் போட்டி மிக நெருக்கமாக இருக்கும். எனவே நாங்கள் வலை பயிற்சியின் போது ஒவ்வொரு பந்தையும், மேட்ச்சில் விளையாடுவது போல் அடித்தோம். அனைத்து மூத்த வீரர்களும் இங்கு இருப்பதால் கடும் சவால் இருக்கும். சச்சின் சார் இங்கே இருக்கிறார். எல்லோரும் பார்க்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை கொடுக்க விரும்புகிறார்கள், என்றார்.

Related Stories: