×

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம்

சென்னை: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதை, காண கோயில்களுக்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.  புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால், பக்தர்கள் வருவதை தடுக்க  நேற்று முன்தினமே அனைத்து பெருமாள் கோயில்களிலும் நுழைவுவாயிலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால், சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயில், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோயில், ஆதி கேசவ பெருமாள் கோயில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில், வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனை தொடர்ந்து மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை காணுவதற்கு வழக்கம் போல் பக்தர்கள் தரிசிக்க காலையிலேயே வந்தனர். ஆனால், கோயில்களின் நுழைவுவாயில் அடைக்கப்பட்டிருந்தது.  இதனால், கோயில்களுக்கு வந்த பக்ரத்கள் வெளியில் நின்றபடி தரிசனம் செய்தனர். அவர்கள் வெளியில் நின்ற படி கோவிந்தா கோஷம் எழுப்பி வழிபட்டு சென்றனர். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் உட்பட முக்கியமான பெருமாள் கோயில்களுக்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Perumal Temples ,Purattasi ,Swami , Special Puja at Perumal Temples on the first Saturday of the month of Purattasi: Devotees stand outside and watch Swami Darshan
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்