×

வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் வெற்றி அடைய திமுக ஆதரவு தர வேண்டும்: முதல்வருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் சந்தித்து சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோருகிற மசோதா நிறைவேற்றியதற்கும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்கும், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்ட விதம் குறித்து கண்காணிக்க சமூக நீதி கண்காணிப்புக்குழு அமைத்ததற்கும், பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவது, விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. பெருமைபடுத்தும் அறிவிப்புகள், பாரதியார் பிறந்த நாளை பள்ளி குழந்தை விழா உள்ளிட்ட பல முற்போக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுதல்களும் தெரிவித்தனர்.

மேலும், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி நியமிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைத்து நாட்டை சூறையாட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டம்பர் 27ல் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தை தமிழகத்தில் வெற்றியடைய செய்ய திமுக ஆதரவு நல்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு முதல்வர் ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், அத்தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிப்போம் என தெரிவித்தார்.

Tags : DMK ,Tamil Nadu ,Marxist ,Chief Minister , Full blockade struggle, DMK support, Chief Minister, Marxist Communist
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...