×

அதானி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை கைவிடவேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகனிடம் மீனவர்கள் கோரிக்கை

சென்னை:  அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒன்றிய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகனிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஒன்றிய மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மீனவர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய இணையமைச்சரிடம் மனுக்களை அளித்தனர். கடலும், ஏரியும் இணையும் முகத்துவாரம் மணல் திட்டுக்களால் தூர்ந்துபோவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிரந்தர முகத்துவாரம் அமைத்து தர வேண்டும்.

பல்வேறு தொழிற்சாலைகளால் மீன்வளம் அழிந்துள்ள நிலையில் அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கடலரிப்பை தடுக்க அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், சுற்றுலாத்தலமாக மேம்படுத்தி படகு சவாரியை முறைப்படுத்தி தர வேண்டும், பெண்களை பாதிக்கும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமாக அப்புறப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் முருகன் கூறுகையில், முகத்துவாரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய, மாநில குழுக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முகத்துவாரம் அமைக்கப்பட்டதாக கருத்தில் கொள்ள வேண்டும். விரைவில் பணிகள் முடிக்கப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் நவீன மயமாக்கப்பட்டு மீன்பிடி துறைமுகமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கடல்பாசி தேவை அதிகரித்திருப்பதால் அதனை அபிவிருத்தி செய்ய தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவது, வருமானத்தை பெருக்குவது ஒன்றிய அரசின் இலக்காக உள்ளது. பிரதம மந்திரி திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்குவதில் இலக்கு உள்ளது. கிஸான் கிரெடிட் கார்டு மீனவர்களுக்கு வழங்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்றார்.

இதனிடையே அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை தொடர்பாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் எந்த கருத்தும், உத்தரவாதமும் தெரிவிக்காமல் புறப்பட்டு சென்றது மீனவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, பொன்னேரி ஆர்டிஓ செல்வம், பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், அரசுத்துறை செயலர் அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ராஜா உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Union Minister ,L Murugan ,Adani , Adani Port, Union Minister, L. Murugan, Fishermen
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...