×

புதுக்கோட்டையில் இரவில் மழை கொட்டியதால் பரிதாபம் சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரில் கார் மூழ்கி அரசு பெண் டாக்டர் பலி: நீச்சலடித்து உயிர் தப்பினார் மாமியார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் கார் மூழ்கி அரசு பெண் டாக்டர் பலியானார். புதுக்கோட்டை அடுத்த நார்த்தாமலை அருகே உள்ள தொடையூர் கிராமத்தை  சேர்ந்த சிவகுமார் மனைவி சத்யா (வயது 35). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்  உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். சொந்த ஊருக்கு  வந்திருந்த இவர், நேற்றுமுன்தினம் இரவு தனது மாமியார் ஜெயம்மாளுடன் காரில்  நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலையில் இருந்து தொடையூருக்கு சென்றார்.  காரை சத்யா ஓட்டினார். தொடையூர் அருகே வந்தபோது இடி, மின்னலுடன் பலத்த மழை  பெய்தது.

இதனால் தொடையூருக்கு முன்பாக உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இது தெரியாமல் சுரங்கபாலத்தில் காரை சத்யா ஓட்டிச் சென்றார். இதில், மழை நீரில் கார் மூழ்கியது. உடனே, ஜெயம்மாள் கார் கதவை திறந்து  நீச்சலடித்து வெளியேறினார். ஆனால், சத்யா சீட் பெல்ட் போட்டிருந்ததால்  தப்பிக்க முடியாமல் காரிலேயே உயிரிழந்தார். தகவல்  அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை  கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த சுரங்க பாலத்தை மூட கோரி கொட்டும்  மழையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை-திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில்  கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில்  நேற்று கீரனூரில் இலுப்பூர் ஆர்டிஓ தண்டாயுதபாணி தலைமையில் தொடையூர்  கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுரங்க பாலத்தை மூடுவது என்றும் மாற்று பாதை அமைக்க ரயில்வே  துறைக்கு பரிந்துரைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, நேற்று இரவு சுரங்க பாலம் மூடப்பட்டது. உயிரிழந்த சத்யாவின் கணவர் சிவகுமார் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆர்யா (10) என்ற ஒரு மகனும், தியா (12) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

மீட்கப்படாத கார்
டாக்டர் உயிரிழப்புக்கு காரணமான சுரங்கப்பாதையில் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் கார் மீட்கப்படாமல் உள்ளது. மேலும் சுரங்கப்பாதையில், சரக்கு லாரியும் மூழ்கி நின்றது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கார் இன்னும் மீட்கப்படாமல் உள்ளது.

Tags : Pali ,Pudukkottai , Pudukkottai, Rain, Mining Bridge, Government Female Doctor
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...