வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.3லட்சம் வலை பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்றுமுன்தினம் மதியம் அதே பகுதியை சேர்ந்த அருட்செல்வன் என்ற மீனவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மணியன் தீவு கடற்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரவு 11 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர் 5 பேர் படகில் வந்தனர். இதில் 2 படகுகளில் இருந்த 8 பேர் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு வாள் மற்றும் அரிவாளுடன் படகுகளில் ஏறினர்.

பின்னர் மீனவர்களை மிரட்டி படகில் அவர்களிடம் இருந்த ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன், 3 டார்ச் லைட் , 4 சிக்னல் லைட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டும், மற்ற 3 படகில் வந்தவர்கள் 500 கிலோ எடையுள்ள ரூ.2.50 லட்சம் வலைகள் பறித்து சென்று விட்டனர். இந்த பொருட்களின் ெமாத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இந்நிலையில் நேற்று காலை சோகத்துடன் 4 மீனவர்கள் கரை திரும்பினர். இதுதொடர்பாக ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்தரிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: