×

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தை செகந்திராபாத்துக்கு மாற்ற ஒன்றிய அரசு முயற்சி: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில், மத்திய சமூகநீதி துறை சார்பில் பலவகையான மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆட்டிசம், மூளை முடக்குவாதம், கண்பார்வை குறைபாடு, காது கேளாமை, பேச்சுத்திறன் இல்லாமை உள்ளிட்ட 21 வகையான குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயர் சிகிச்சைகள், பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனம் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி மாற்றுத்திறனாளி மறுவாழ்வு தொடர்பான இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் போன்றவற்றையும் நடத்தி வருகிறது. மேலும், தமிழக அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகிறது.

  இந்த நிறுவனத்தை தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் செயல்பட்டு வரும் ஒரே ஒரு குறைபாட்டுக்கான மத்திய நிப்பெட் நிறுவனத்துடன் இணைக்க ஒன்றிய அரசு கருத்துரு கேட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டுமே செயல்படும் இந்த நிறுவனம் வேறு மாநிலத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முக்கிய முடிவுகளையும், மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்புக்கான அனுமதிகள் போன்றவற்றை செகந்திராபாத்தில் உள்ள தலைமையகத்தில் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து, வழக்கறிஞர் அபிநயா என்பவர் கூறும்போது, ‘காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசில் திமுக இருந்தபோது சமூக நீதித்துறை அமைச்சர்களாக சுப்புலட்சுமி ஜெகதீசன், நெப்போலியன் ஆகியோர் இருந்தனர். அப்போது, இந்த நிறுவனம் இங்கு கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை செகந்திராபாத்தில் உள்ள நிறுவனத்தோடு இணைத்தால், தமிழகம் தனது உரிமையை இழக்க நேரிடும். ஆகவே, முட்டுக்காட்டில் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தை செகந்திராபாத் நிறுவனத்தோடு இணைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Government ,Disability Development Corporation ,Secunderabad , Disabled, Union Government, Social Activists
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...