நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் ரத்தால் ஆத்திரம் அமெரிக்கா, ஆஸி.யுடன் தூதரக உறவு துண்டிப்பு: தூதர்களை திரும்ப பெற்றது பிரான்ஸ்

ஷபாரிஸ்: ஆஸ்திரேலியா தனது நாட்டுடன் செய்திருந்த நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாலும், அந்நாட்டுக்கு அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை வழங்க ஒப்பந்தம் செய்ததாலும் ஆத்திரம் அடைந்துள்ள பிரான்ஸ், இந்த நாடுகள் உடனான தூதரக உறவை துண்டித்துள்ளது. மேலும், தனது நாட்டுக்கான தூதர்களையும் திரும்ப அழைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து சில தினங்களுக்கு புதிய அமைப்பை (ஆக்கஸ்) அமை்த்தன. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க, அமெரிக்கா தொழில்நுட்பங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனால், பிரான்சிடம் இருந்து டீசல் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஏற்கனவே போட்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இதனால், பிரான்ஸ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்காவுடன் பிரான்ஸ் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு வைத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில், தனது நாட்டை சேர்க்காமல் புதிய அமைப்பை உருவாக்கியது மட்டுமின்றி, நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதற்கு அமெரிக்கா காரணமாக இருப்பதை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லே டிரியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆஸ்திரேலியா எங்கள் நாட்டுடனான வர்த்தக உறவை முறித்து கொண்டு, எங்களின் பாரம்பரிய நட்பு நாடான அமெரிக்காவுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பம் பெறுவதற்காக கைகோர்த்துள்ளது.

இரு நாடுகளின் இந்த முடிவுகளும், அவற்றின் நடத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எனவே, இந்த இருநாடுகளுக்கான தூதர்களையும் திரும்ப அழைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,’ என கூறியுள்ளார். பிரான்சின் இந்த அதிரடி முடிவால், அமெரிக்காவும் ஆஸ்திரலேயாவும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன் கூறுகையில், ‘‘தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது பற்றி பிரான்ஸ் அரசுடன் அமெரிக்கா பேசி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வை தீர்க்க முயற்சி செய்வோம்,’’ என்றார். ‘எங்கள் முடிவின் மூலம் பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை புரிந்து கொள்கிறோம். அமெரிக்கா உடனான ஒப்பந்தம், எங்களின் தேசிய பாதுகாப்பு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு,’ என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்்ளது.

Related Stories: