மீண்டும் பாஜ.வுடன் சிவசேனா கூட்டணி?..உத்தவ் பேச்சால் பரபரப்பு

மும்பை: ஒன்றிய அமைச்சர்களை பார்த்து ‘எதிர்கால சகாக்களே’ என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதால், பாஜ.வுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்கப் போகிறதா? என பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜ.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. பாஜ.வுடன் பல்வேறு விஷயங்களில் சிவசேனா வேறுபட்டு நின்றாலும், சமீபகாலமாக நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற மகாராஷ்டிரா முதல் வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தவ் தாக்கரே, ஒன்றிய அமைச்சர்கள் ராவ்சாகேப் தன்வே, பகவத் காரத் ஆகியோருடன்  பங்கேற்றார். அப்போது உத்தவ், ‘‘இங்கு வந்திருக்கும் எனது இன்னாள், முன்னாள்… நாம் கூட்டணி சேர்ந்தால் வரக்கூடிய எதிர்க்கால சகாக்களே...’’ என பேச்சை ஆரம்பித்தார். அதோடு அவர், ‘‘எனக்கு ரயில்வே துறை மிகவும் பிடிக்கும். ஏன் என்றால், ரயில்கள் தண்டவாளத்தை விட்டு விலக முடியாது, திசையை மாற்ற முடியாது. ஸ்டேஷனை அடைய சில திருப்பங்கள் இருக்கலாம். ஆனால், இன்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகிச் செல்வதில்லை’’ என்றார்.

உத்தவ்வின் இந்த பேச்சு பல யூகங்களை எழுப்பி உள்ளது. சிவசேனா மீண்டும் பாஜ.வுடன் கூட்டணி சேரப் போவதைதான் உத்தவ் சூசகமாக கூறுகிறாரா என்ற விவாதத்தையும் மகாராஷ்டிரா அரசியலில் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: