டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா ஏமாற்றம்

எஸ்பூ: பின்லாந்து அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்திலும் போராடி தோற்ற இந்தியா, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன் தோல்வியைத் தழுவிய நிலையில், இரட்டையர் ஆட்டத்தில் ராம்குமார் - திவிஜ் ஷரண் இணை களமிறங்குவதாக இருந்தது. இந்நிலையில், கடைசி நேர மாற்றமாக திவிஜ் ஷரணுக்கு பதிலாக அனுபவ வீரர் ரோகன் போபண்ணாவுடன் ராம்குமார் இணைந்து விளையாடினார்.

கேப்டன் ரோகித் ராஜ்பாலின் இந்த வியூகமும் பலனளிக்கவில்லை. வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய போபண்ணா - ராம்குமார் ஜோடி 6-7 (2-7), 6-7 (2-7) என நேர் செட்களில் பின்லாந்தின் ஹென்றி கோன்டினன் - ஹாரி ஹெலியோவாரா ஜோடியிடம் போராடி தோற்றது. 2 செட்டிலும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த இப்போட்டியில் (1 மணி, 38 நிமிடம்) போபண்ணா ஜோடி பல நல்ல வாய்ப்புகளை வீணடித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. பின்லாந்து 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Related Stories:

>