வண்டலூர் - நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கான வெளிவட்டச் சாலை அமைக்க கடந்த 2012ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 29.65 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி நில உரிமையாளர்கள் ஆனந்த் கங்கா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், நெடுஞ்சாலை சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சட்டத்தின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய அனைத்து நடைமுறைகளையும் அரசு பின்பற்றியுள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>