×

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் பிடி கொடுக்காததால் மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்பியாகிறார் எல்.முருகன்: பாஜ தலைமை அறிவிப்பு

சென்னை: புதுவையில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிடி கொடுக்காததால், மத்தியப்பிரதேசத்தில் இருந்து ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன் திடீரென்று ஒன்றிய ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் மாநில தலைவராக முன்னாள் போலீஸ் எஸ்பி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், மத்திய அமைச்சராக்கப்பட்ட முருகன், எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் 6 மாதத்திற்குள் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 2 எம்பி பதவியும், புதுவையில் ஒரு எம்பி பதவிக்கும் அடுத்தமாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதில் தமிழகத்தில் இருந்து 2 எம்பி பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிடுகிறவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் திமுக சார்பில் 2 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். புதுவையில் அதிமுகவைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன், ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் 6ம் தேதியுடன் முடிகிறது. அங்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி உள்ளது. இருவரும் சம பலத்துடன் உள்ளதால் இரு கட்சியினரும் தங்களுக்குத்தான் எம்பி பதவி வேண்டும் என்று கூறி வந்தனர்.
பாஜ அங்கு முருகனை எம்பியாக்க விரும்பியது. இது குறித்து புதுவை பாஜ பார்வையாளராக உள்ள நிர்மல்குமார் சுரானா கடந்த வாரம் புதுவை வந்தார். அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார்.

ஆனால், புதுவையில் பாஜவுக்கு 2 அமைச்சர், புதுவை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டு விட்டது. நான் மருத்துவமனையில் இருந்தபோது நியமன எம்எல்ஏக்களை என்னிடம் கேட்காமல் நியமித்துக் கொண்டீர்கள். இதனால் எம்பி பதவியை விட்டுத் தர முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ரங்கசாமியிடம் தன்னால் பேச முடியாது, மேலிடம்தான் பேச வேண்டும் என்று அவர் ஒதுங்கிக் கொண்டார். வழக்கமாக எந்த முடிவு எடுத்தாலும் ரகசியமாக வைத்திருக்கும் ரங்கசாமி, கடைசி நேரத்தில்தான் அறிவிப்பார். இதனால் இந்த முறையும் எம்பி வேட்பாளரை, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போதுதான் யார் வேட்பாளர் என்று தெரியவரும்.

அதுவரை ரங்கசாமி ரகசியம் காப்பார். புதுவை எம்பி பதவி முருகனுக்கு இல்லை என்று தெரிந்ததால், வேறு மாநிலத்தில் அவரை எம்பியாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி தாவர்சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து காலியான அந்த இடத்துக்கு முருகன் எம்பி வேட்பாளராக நேற்று காலையில் அறிவிக்கப்பட்டார். அதேபோல அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்பானந்த சானோவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அவரும் சமீபத்தில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அசாம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அசாம் மாநிலத்தில் இருந்து சர்பானந்த சோனவாலும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து முருகனும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3வது எம்பி
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் திருநாவுக்கரசர், இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது அதே மாநிலத்தில் இருந்து 3வதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : L. Murugan ,Madhya Pradesh ,NR Congress ,Puthuvai ,BJP , puduchery , NR Congress, Madhya Pradesh, MP, L. Murugan
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...