காங்கிரசில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா: அவமானப்படுத்தப்பட்டேன் என வேதனை

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு எதிராக 50 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் பதவி விலகினார். தனக்கு எதிராக கட்சியில் நடந்த விஷயங்களால் அவமானமாக உணர்வதாக அமரீந்தர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு, மொத்தமுள்ள 117 சட்டப்பேரவை உறுப்பினர்களில், காங்கிரசுக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்தாண்டு இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரசில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக கட்சி மேலிடத்தை சந்தித்து முறையிட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இதற்கு அமரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சித்து மாநில காங்கிரஸ் தலைவரான பிறகுதான் பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுத்தது. சித்து கட்சியில் தனக்கான ஆதரவாளர்களை திரட்டி, அமரீந்தருக்கு எதிராக வெளிப்படையாக பேசினார். சித்துவின் ஆலோசகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதை அமரீந்தர் கண்டித்தார்.

கட்சிக்குள் சித்துவுக்கு பலமான ஆதரவு இருந்த நிலையில், அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அவரது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் 4 அமைச்சர்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக அமரீந்தருக்கு நெருக்கடி வலுத்த நிலையில், உடனடியாக அமரீந்தரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி காங்கிரசின் 50 எம்எல்ஏக்கள், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். மேலும், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவு எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதன் காரணமாக, நிலைமையை சீர் செய்ய கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் மற்றும் பஞ்சாப் மாநில பொறுப்பாளர்களான அஜய் மக்கான், ஹரிஷ் சவுத்ரி ஆகியோரை கட்சி மேலிடம் நேற்று சண்டிகருக்கு அனுப்பியது. அவர்கள் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியான நிலையில், மாலை 4.30 மணி அளவில் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது மனைவியும் எம்பி.யுமான பிரனீத் கவுர், மகன் ரனிந்தர் சிங் ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரீந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

பின்னர் அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், ‘‘நான் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இனி அவர்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவரை முதல்வராக தேர்வு செய்து கொள்ளட்டும். பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக காலையிலேயே கட்சி தலைவர் சோனியாவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டேன். எனக்கு தகவல் தெரிவிக்காமல் 3வது முறையாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். என்னால் ஆட்சியை வழிநடத்த முடியாது என்றும், என் மீது சந்தேகம் இருப்பதாகவும் நான் நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்களால் அவமானமாக உணர்கிறேன். எனது எதிர்கால அரசியலுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வேன். எனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார். இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமரீந்தரின் ராஜினாமா பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி பஞ்சாப்பின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சோனியாவுக்கு அதிகாரம்

நேற்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில்,பஞ்சாப்பின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சோனியா காந்திக்கு அளி்க்கப்பட்டது.

ஐயம் வெரி சாரி...

முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக, நேற்று காலை கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமரீந்தர் சிங் கூறியபோது, ‘நான் மிகவும் வருந்துகிறேன்,’ என்று சோனியா கூறியுள்ளார்.

சித்துவை முதல்வராக்க கூடாது

பதவி விலகிய பிறகு அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், ‘சித்துவுக்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரை பஞ்சாப் முதல்வராக்கினால் கடுமையாக  எதிர்ப்பேன். அவர் இந்த பதவிக்கு தகுதியவற்றவர்,’’ என்றார்.

ஆட்சியை பிடிக்க உதவியவர்

அமரீந்தர் சிங் (79), கடந்த 1965ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் சண்டையிட்ட ராணுவ வீரர். கடந்த 1963ல் ராணுவத்தில் சேர்ந்த அமரீந்தர், 1980ம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். இவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் . ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் கட்சியில் அழைத்து வரப்பட்ட அமரீந்தர், 1984ம் ஆண்டு பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த சம்பவத்தை தொடர்ந்து அகாலிதளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். பின்னர், 2008ல் மீண்டும் காங்கிரசில் இணைந்த அமரீந்தர், கட்சியை பலப்படுத்தினார். பல மாநிலங்களில் அடுத்தடுத்து காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், 2017ல் சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மையுடன்  மகத்தான வெற்றி தேடித் தந்தார்.

சித்து வந்ததும் கலகம் பிறந்தது

கடந்த 2017ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன் சித்து பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். சித்து வந்த பிறகு தான் உட்கட்சி பூசல் அதிகரிக்க தொடங்கியது. சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. இதனால், ஆரம்பத்தில் இருந்தே அமரீந்தருக்கும், சித்துவுக்கும் ஒத்து வரவில்லை. 2019ல் அமைச்சரவை மாற்றத்தில் முக்கியமில்லாத பதவி தரப்பட்டதாக கூறி சித்து அமைச்சர் பதவியை நிராகரித்தார். ‘எனது கேப்டன் (அமரீந்தரை அனைவரும் கேப்டன் என அழைப்பது வழக்கம்) ராகுல்தான். அவர் கேப்டன்களுக்கு கேப்டன்’ என அமரீந்தரை மறைமுகமாக விமர்சித்தார். மாநில தலைவராக சித்து பொறுப்பேற்ற பிறகும் அவருக்கும் அமரீந்தருக்கும் இடையே உறவு சீராகவில்லை.

Related Stories: