அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினர் ராம்குமார் தாக்கல் செய்த மனுவில், 2017 செப்டம்பர் 12ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுக கட்சி விதிகளின்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சி விதிகள்படி புதிய பதவிகளை உருவாக்கவோ அல்லது பொதுச் செயலாளர் என்ற பதவியை மாற்றவோ அல்லது பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்களை மாற்றவோ பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

தற்போது அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு நடத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக கட்சி விதிகள் படியும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவின்படியும் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கு முன்பு  பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.ஆனால், கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள்படி பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அளித்து அதற்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

அதன்படி, கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. கட்சியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக உருவாக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது செல்லாது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு திங்கட்கிழமை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

More
>