×

பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங்: எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன் என பேட்டி..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

சமீப காலமாக காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். இதனால் அமரிந்தர் சிங்கின் கோபம் அதிகமானது.

இதனையடுத்து,  காங்கிரஸ் கட்சி மேலிடம் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்கும் மற்றொரு சர்ச்சை வெடித்தது. அதாவது எம்.எல்.ஏக்கள் சிலர் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக 50 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், முதல்வர் அமரிந்தர் சிங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் அரசியலில் மோதல் போக்கு அதிகமானது. மேலும், முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நானும், எனது தந்தையும் ராஜ்பவன் செல்கிறோம். அப்பா பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இனி எங்கள் குடும்பத்தின் தலைவராக எங்களை வழிநடத்துவார் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அமரீந்தர் சிங் கூறுகையில் தொடர்ந்து 3வது முறையாக நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ அவர்களை முதல்வராக தேர்வு செய்துகொள்ளட்டும். மேலும், கட்சியில் நிலவிய ஊழல் விவகாரங்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியதால் ராஜினாமா செய்துள்ளேன். தற்போது வரை நான் காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின் எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார்.


Tags : Punjab ,State Principal ,Amarinda Singh , Punjab Chief Minister, Amarinder Singh resigns
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்