புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை: வெளியில் நின்று பக்தர்கள் வழிபாடு

திருச்சி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், குணசீலம் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு  பூஜை நடைபெற்றது. கொரோனா காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோயில் வாசல்களில் நின்று வழிபாடு செய்தனர்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை. இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும்.

அந்த வகையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் ரங்கா ரங்கா கோபுர வாசல் உள்பட கோயில் வாசல்களில் நின்று சூடம், விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதேபோல் குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி, உறையூர் அழகிய மனவாளர் கோயில், ரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில், தா.பேட்டை அருகே தலைமலை சஞ்சீவி ராய பெருமாள் கோயில், தொட்டியம் வேதநாராயண பெருமாள், துறையூர் பெருமாள் மலைகோயில்  உள்பட அனைத்து பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் தேவி, பூதேவியுடன் சுவாமி அருள்பாலித்தார். கரூர் தாந்ேதாண்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், மேட்டுத்தெரு  அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கோயில்  வாசல்களில் நின்று தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை கீழ 3ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில்  சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் பெருமாள், உற்சவர் பெருந்தேவி சமேத வரதராஜர், தாயார் தேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர். உற்சவர் வரதராஜர் கருட சேவையில் காட்சியளித்தார்.

இதேபோல் விட்டோபா பெருமாள் கோயில், திருக்கோர்ணம் உள்பட நகரப்பகுதியில் ஆங்காங்கே உள்ள சிறிய பெருமாள் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொன்னமராவதியில் உள்ள தேவி, பூதேவி சமேத அழகப்பெருமாள் கோயில், வேகுப்பட்டி மற்றும் மேலைச்சிவபுரி கல்யாண சுந்தரராஜ பெருமாள் கோயில், வடகாடு அருகே ஆலங்காட்டில் உள்ள வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில்   சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் சென்னை பார்த்தசாரதி கோயில் உள்பட மாநில முழுவதும் பெருமாள் கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories:

More