புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை!: தமிழகம் முழுவதும் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு...மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு மகா தீபாராதனை..!!

சென்னை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்ட நிலையில் இந்தாண்டும் கொரோனா விதிகள் அமலில் உள்ளன.  கொரோனா வழிகாட்டுதல் படி சனிக்கிழமை கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்றபடி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாட வீதியில் 200 ஆண்டுகள் பழமையான பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலையிலேயே நடை திறக்கப்பட்டு சந்தா நதி, பால், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குடந்தை உப்பிலியப்பன் கோவில் கோபுரம் முன்பு விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வழக்கமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே நேரில் சென்று ஏழுமலையானை வழிபட்டனர்.

Related Stories:

More