பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல்-பாலக்காடு வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

*110 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல்-போத்தனூர் ரயில் பாதை திட்டத்தில் கடந்த 2009 ஆண்டு துவங்கப்பட்ட அகல ரயில் பாதை பணி 8 ஆண்டுகளில்   நிறைவுபெற்றது. கடந்த 2015ம் ஆண்டு முதல் ரயில் இயக்கம் துவங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு 2020  மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

பல  மாதத்திற்கு பிறகு பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வழியாக சென்னைக்கும்,  திருவனந்தபுரத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்  இயக்கப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக  பொள்ளாச்சியிலிருந்து கோவை மற்றும் திருச்செந்தூர், பாலக்காடு உள்ளிட்ட  பகுதிகளுக்கு பயணிகள் சேவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக பல்வேறு இடங்களுக்கு அதிவேக ரயில்  இயக்குவதற்காக, தண்டவாளத்தின் உறுதி தன்மையை அறிய அவ்வப்போது  கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.  திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு ரயில் நிலையம்  வரை  அதிவேக சோதனை ஓட்டம் நடத்த தென்னக ரயில்வே முடிவு செய்தது.

அதன்படி  நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 3 பெட்டிகள்  இணைக்கப்பட்ட  என்ஜினுடன் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில்  புறப்பட்ட அந்த ரயில் பழனி, மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம் என எந்த  இடத்திலும் நிற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பொள்ளாச்சியை வந்தடைந்தது. பின்னர் பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடுக்கு சென்றது. இந்த  ரயிலானது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.

பாலக்காட்டிலிருந்து திண்டுக்கல் வரை செல்லும் முன்பு தண்டவாளத்தின்  அதிர்வு மற்றும் அதன் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர்.  திண்டுக்கல்லிலிருந்து பாலக்காடு வரையிலும் அதிவேக ரயில் சோதனையோட்டம்  நடந்ததால், பொள்ளாச்சி வழியாக பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவை அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

More
>