×

நான் டிசைனர் இல்லை...

நன்றி குங்குமம் தோழி

பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத நாட்டிய கலைஞருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்தவர் ஸ்டைலிஸ்டான உத்ராமேனன். இவர் இயக்குனர் கவுதம் மேனனின் சகோதரி. இவரின் பெரும்பாலான படத்திற்கு உத்ராதான் ஸ்டைலிஸ்டாக வேலைப் பார்த்து வருகிறார். தற்போது நடிகர் நானி நடித்து விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான ‘கேங் லீடர்’ தெலுங்கு படத்திற்கும் இவர் தன் திறமையை அள்ளித் தெளித்துள்ளார். ‘‘இந்தப் படத்தில் ஆறு கதாபாத்திரங்களுக்கு உடை அலங்காரம் செய்து இருக்கிறேன். இவர்கள் அனைவரும் பல காட்சிகளில் ஒன்றாக இருப்பதால்  ஒவ்வொருவரும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே உடைகளின் நிறங்களில் மாற்றங்கள் செய்து இருக்கேன்.

எனக்கு இயக்குனர் விக்ரம் குமார் முழு சுதந்திரம் கொடுத்திருக்கார். அப்படிப்பட்ட இயக்குனர்களுடன் எனக்கு வேலைப் பார்க்க பிடிக்கும்’’ என்றார் உத்ராமேனன். ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’... ஹைலஜா ரெட்டி அல்லுடு மற்றும் சார்ரைநோடு படத்தில் இரு பாடல்களுக்கு வேலைப் பார்த்து இருக்கும் உத்ராவின் தற்போதைய மிகப் பெரிய பிளாக்பஸ்டர் பிராஜக்ட் டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம்.

இந்த படத்திற்காக அவர் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடெல்லா, இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் நம்பியார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு அனைவருடன் இணைந்து ஒவ்வொருவரின் உடைக்கு ஏற்ப நிறம் மற்றும் அமைப்பினை குறித்து விவரித்துள்ளார். ‘‘எனக்கும் ராஜீவனுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. நான் வேலைப் பார்த்த அனைத்து படங்களிலும் ராஜீவன் தான் தயாரிப்பு வடிவமைப்பாளர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்பதான் உடையின் நிறங்களை அமைக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் கதை மற்றும் அமைப்புக்கு ஏற்பவும் நிறங்களை தேர்வு செய்யணும்.

உதாரணத்திற்கு ஒரு வீட்டின் உள் அலங்காரத்தில் உள்ள ஜன்னல் திரை மற்றும் சுவற்றின் நிறத்திற்கு ஏற்ப கதாபாத்திரத்தின் உடையும் மாறுபடும். நாம் நினைப்பது போல் ஏதாவது ஒரு நிற உடையினை தேர்வு செய்ய முடியாது. நம்மை சுற்றி இருக்கும் நிறங்களுக்கு ஏற்ப தான் காட்சி அமைக்கவேண்டும். அப்போது தான் கண்களை உறுத்தாது. என்னை அறிந்தால் படத்திற்கு முன் ராஜீவன் கேட்டுக் கொண்டதால் ‘மனம்’ திரைப்படத்திற்காக அந்த படத்தில் வரும் வீட்டுக்கு உள் அலங்காரம் செய்து கொடுத்தேன். அதன் பின் நானும் அவரும் பல படங்களில் இணைந்து செயல்பட்டு வந்தோம்.

‘சைரா...’ படத்தை பற்றி சொன்ன போது, என்னால் அந்த படத்தில் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நான் சென்னைவாசி. என்
மகனுக்கு ஆறு வயசுதான் ஆகிறது. அவனை விட்டுட்டு என்னால் வெளியூர் செல்ல முடியுமான்னு சந்தேகமா இருந்தது. ஆனால் கதையை கேட்டபோது, என்னால் மறுக்க முடியல. ஐதராபாத் பறந்தேன். நடிகர்களை சந்தித்தேன்... அவர்களுக்கான உடை அலங்காரத்தை எல்லாம் வடிவமைச்சேன். சிரஞ்சீவியின் கதாபாத்திரம் 1800ம் நூற்றாண்டை சார்ந்தது என்பதால் அதற்கான உடை, ஆபரணம், சிகை அலங்காரம் எல்லாம் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்து கொடுத்தேன்’’ என்றவர் அனைத்து கதாபாத்திரத்தின் உடை அலங்காரத்தை சென்னையில் இருந்தே வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
 
‘‘படத்தின் கதை 1800ம் நூற்றாண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்கள், கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் என அனைவரும் வாழ்ந்து வந்த காலம். சிரஞ்சீவியின், உய்யாலாவாட் நரசிம்மரெட்டியின் கதாபாத்திரத்தை தவிர அந்த படத்தில் தோன்றிய ஜமீன்தார்களுக்கும் ரிச் லுக் தரணும். அது மட்டும் இல்லை... அவர்களின் உடைகளுக்கு ஏற்ப பின்னணி அமைப்பும் இருக்கணும். ஜமீன்தார்களாக நடிச்ச கிச்சா சுதீப் மற்றும் ரவிகிஷனும் இந்த கேட்டகிரியில் அடங்குவார்கள்’’ என்றார் உத்ரா.

எந்த ஒரு படத்திற்கும் வண்ணங்கள் மிகவும் அவசியம்.‘‘ராஜீவன், ஹாலிவுட் படத்தில் வருவது போல் மியூட்டெட் நிறங்களை பயன் படுத்தலாம் என்றார். அதனால் நான் ஆங்கிலேயர் கதாபாத்திரங்களுக்கு அடர்ந்த சிவப்பு, வெள்ளை நிறங்களுக்கு பதிலாக, தக்காளி நிற சிவப்பும், வெளிர் வெள்ளை நிறங்களை பயன்படுத்தினேன். கொரில்லா கதாபாத்திரத்திற்கு மண் சார்ந்த நிறங்கள் மற்றும் பார்ப்பதற்கு கடினமாக இருக்குமாறு அமைத்தேன். என்னுடைய ஸ்டைலுக்கு ஏற்ப சுஷ்மிதாவும், அமிதாப்சார், சிரஞ்சீவி, தமன்னா, நயன்தாரா எல்லாரும் உடை அலங்காரம் வடிவமைத்தார்கள்.

நான் ஸ்டைலிஸ்ட் தான் டிசைனர் கிடையாது. நான் மற்ற கதாபாத்திரங்களுக்கு டிசைன் செய்ய சொன்ன போது, நான் மற்ற உடை அலங்கார நிபுணர்கள் மற்றும் என்.ஐ.எஃப்.டி மாணவர்களுடன் சேர்ந்து வடிவமைச்சேன்’’ என்றார் உத்ரா. ‘‘எப்போதும் ஒரு குழு உடை வடிவமைப்பதற்காக தயார் நிலையில் இருக்கும். ஒரு பக்கம் ஒரு பாத்திரத்தில் டீ டிகாஷன் கொதிச்சுக் கொண்டு இருக்கும். அந்த தண்ணீரில் துணியை போட்டு கொதிக்க விட்டால் தான் மண் நிறம் மற்றும் பழைமையான லுக் கிடைக்கும். மறுபக்கம் எம்பிராய்டரியும், உடைகளை சரி பார்க்கும் டீம் என இந்த படத்திற்காக குழு குழுவாகவே வேலைப் பார்த்தோம்.

ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் உடைகளும் அவர்களின் அங்கீகாரத்திற்கு ஏற்ப வடிவமைத்தேன். கிராம மக்கள் மற்றும் பழங்குடியினரின் உடைகள் அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் சூழல் கொண்டு அமைச்சேன். ராஜபாண்டியாக வரும் விஜய சேதுபதிக்கு ஒரு தனிப்பட்ட வடிவம் கொடுத்து இருந்தேன். அவருடைய மீசையே வித்தியாசமாக இருந்தது. மேலும் அவரின் குழுவிற்கு எல்லாம் புலி படத்தை டாட்டூவாக வரைந்தேன்’’ என்று கூறும் உத்ரா, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக பல வரலாறு புத்தகங்களை புரட்டியுள்ளார்.

‘‘சினிமா மூலம் நாம் பல விஷயங்களை மக்கள் முன்பு கொண்டு செல்வது மட்டும் இல்லாமல், அதை அவர்கள் நம்பவும் செய்வார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதனாலேயே அந்தக் காலக்கட்டத்தில் உள்ள மக்களின் உடை மற்றும் அவர்கள் அணியும் விதம்  என எல்லாவற்றையும் மிகவும் கவனத்துடன் கையாண்டேன். சைரா எனக்கு சவாலாக அமைந்த படம். அந்த படத்தில் உடைகள் சிம்பிளாகவும், பாரம்பரியம் மாறாமல், அதே சமயம் சில இடங்களில் சிரஞ்சீவிக்கு கம்பீரமான தோற்றத்தையும் அமைத்து இருந்தேன்.

இந்த திறமையை அம்மாவிடம்தான் கற்றுக் கொண்டேன். அவங்களுக்கு நிறங்களுடன் விளையாட பிடிக்கும். அவங்க உடை தேர்வு செய்யும் நிறங்கள் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அவங்க தான் என்னுடைய குரு. இந்த தொழிலை பொறுத்தவரை, இருப்பதை குழந்தை போல் மாற்றி அமைக்க தெரியணும்’’ என்றார் உத்ரா மேனன்.

தொகுப்பு: ஷம்ரிதி

Tags : designer ,
× RELATED வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன்