துரந்த் கோப்பை கால்பந்து எப்சி கோவா கோல் மழை

கொல்கத்தா: துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் எப்சி கோவா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்சியை வீழ்த்தியது. கொல்கத்தாவில் நடைபெறும் துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பி பிரிவு லீக் ஆட்டத்தில்  எப்சி கோவா-ஜாம்ஷெட்பூர் எப்சி  அணிகள் மோதின. கோவா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.  அதனால் ஜாம்ஷெட்பூர் திணற, கோவா வீரர்கள் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். கோவா வீரர் தேவேந்திரா  ஆட்டத்தின் 20 நிமிடத்திலும்,  ரெபெல்லோ 27வது நிமிடத்திலும் தொடர்ந்து கோலடித்தனர்.

முதல் பாதி முடியும் தருவாயில் 44 வது நிமிடத்தில் தேவேந்திரா தனது 2வது கோலை அடிக்க, முதல் பாதியில் கோவா 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது பாதியிலும் கோவா அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக  கோவாவின் நொகுவேரா 47வது நிமிடத்திலும்,   நெமில் 81வது நிமிடத்திலும்  கோலடித்தனர். ஆனால் ஜாம்ஷெட்பூர்  பலமுறை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அதனால் கோல் மழை பொழிந்த  கோவா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. எனவே பி பிரிவில் முதலிடம் பெற்ற கோவா காலிறுதிக்கும் முன்னேறியது. பி பிரிவில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆர்மி கிரீன்-சுவேதா டெல்லி அணிகள் மோதின. அதில் ஆர்மி கிரீன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.  அதனால் பி பிரிவில் 2வது இடம் பிடித்த ஆர்மி கிரீன் காலிறுதிக்குள் நுழைந்தது.

Related Stories:

More
>