×

சுகாதாரம், கல்வி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தபோது கே.சி.வீரமணி சொத்து குவித்தது எப்படி?

* லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

* மணல் கடத்தல் வழக்கும் பாய்கிறது


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அமைச்சராக இருந்த 8 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தது குறித்து அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக 275 யூனிட் மணல் பதுக்கி வைத்திந்ததால் கே.சி.வீரமணி மீது மணல் கடத்தல் வழக்கு பாய்கிறது. மேலும் 654 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன.அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை கே.சி.வீரமணி, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை, ஜோலார்பேட்டை, குடியாத்தம், வெட்டுவாணம், அரக்கோணம், ஏலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு என 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் 34 லட்சத்து ஆயிரத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ், மினி கூப்பர் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 623 கிராம் (5 கிலோ) தங்க நகைகள், 7.2 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் ஜோலார்பேட்டை வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டன. அதில், கே.சி.வீரமணியின் வீட்டில் மட்டும் 2.5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல் குடியாத்தம் வேளாண்மை கல்லூரி, ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி, அவரது சகோதரர்கள் கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் ஆகியோரின் வீடுகள், குருவிமலையில் உள்ள அவரது மாமனார் பழனியின் வீடு, ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டல், ஏலகிரி, பெங்களூருவில் உள்ள ஓட்டல், சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை வகைப்படுத்தி கணக்காய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வின் போது கே.சி.வீரமணி 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் நின்ற போது வேட்பு மனுவில் இணைத்த சொத்து விவரங்களுடனும், சேமிப்பு, அசையும் சொத்துகள் உட்பட பிற விவரங்களுடனும் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் உள்ள விவரங்களையும் வைத்து ஒப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் தனது சகோதரர்களுடன் இணைந்தும், தனியாகவும் நடத்தி வந்த பீடி கம்பெனி மற்றும் லாரி தொழிலில் கிடைத்த வருவாய் தொடர்பான விவரங்களையும் தங்கள் ஆய்வின் போது கணக்கில் எடுத்துக்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் வீரமணியால் பாதிக்கப்பட்ட அதிமுகவினர், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மேலும், புகார்களை அனுப்பி வைக்கவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிப்காட் பகுதியில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 17.30 மணி நேரம் சோதனை நடத்தினர். அதில் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் என பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், கே.சி.வீரமணியின் வீட்டின் பின்புறம் சட்டத்திற்கு விரோதமாக மணல் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் தற்போதைய சந்தை மதிப்பு செய்யப்பட்டது. அதில் ₹30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கே.சி.வீரமணி வீட்டில் வெளிமாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்யப்பட்டதற்கான ரசீதுகளும் சிக்கியுள்ளது. இதனால் அவர் அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டத்திற்கு எதிராக பாலாற்றில் இருந்து மணல் கடத்தியதும் உறுதியாகி உள்ளது. இதையடுத்து கே.சி.வீரமணி மீது மணல் கடத்தல் மற்றும் பதுக்கி வைத்தது குறித்து வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கே.சி.வீரமணி வீட்டில் இருந்து 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் வெளிநாடு செல்லும் போது இந்திய சட்டப்படி இந்திய ரூபாயை 5 ஆயிரம் டாலர் வரை மாற்றி எடுத்து செல்லலாம். அதேநேரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் சம்பந்தப்பட்ட நபர் கொண்டு வந்த வெளிநாட்டு பணத்துக்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால் எந்தவித கணக்கும் காட்டாமல் அமெரிக்க டாலர் உட்பட எந்த வெளிநாட்டு பணமும் வீட்டில் பதுக்கி வைப்பது குற்றமாகும். கே.சி.வீரமணி தற்போது வெளிநாடு செல்லாத நிலையில் 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் வைத்திருந்தார். இது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பணம் பதுக்கி வைத்திருந்தது குறித்து தனியாக போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

வங்கிக்கணக்குகள் முடக்கம்
கே.சி.வீரமணிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று கே.சி.வீரமணி பயன்படுத்திய அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் கே.சி.வீரமணி மற்றும் உறவினர்கள் பயன்படுத்திய லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திறந்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2வது நாள் சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
சென்னை சூளைமேடு சிவானந்தா சாலையில் கே.சி.வீரமணியின் நண்பரும் தொழில் பாட்னருமான பிரபல பால் நிறுவனத்தின் மேலாளர் ராம ஆஞ்சநேயலு, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தண்ட பரமானந்தம் ஆகியோரது வீடுகள் நேற்று முன்தினம் பூட்டப்பட்டிருந்தன. அவர்களிடம் போன் செய்து அழைத்தபோது, அவர்கள் வர மறுத்தனர். இதனால் 2 வீடுகளும் சீல் வைக்கப்பட்டன. பின்னர் போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, நேற்று அவர்கள் சென்னை திரும்பினர். அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு பேர் வீட்டிலும் காலை முதல் சோதனை நடத்தினர். அப்போது கே.சி.வீரமணி இவர்களுடன் பல்வேறு தொழில் செய்து வந்ததற்கான ஆவணங்கள் மற்றும் தொழில் செய்வதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தங்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து 654 சதவீதத்தையும் தாண்டும்
கே.சி.வீரமணியின் சகோதரி, கனடாவில் வசித்து வருகிறார். இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவரது தந்தை பீடி கம்பெனி சிறிய அளவில் நடத்தி வந்தார். அதன் பின்னர் ரியல் எஸ்டேட், லாரி கம்பெனி மூலம் மணல் அடிப்பது போன்றவற்றில் கே.சி.வீரமணி ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் 2011ம் ஆண்டு ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேலூரைச் சேர்ந்த மாஜி அமைச்சர் விஜய், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவரது பதவி பறிக்கப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி சுகாதாரத்துறை அமைச்சரானார். அதைத் தொடர்ந்து அவர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, தமிழ்வளர்ச்சி ஆகிய துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். வணிக வரித்துறையைப் பொறுத்தவரை ஒரு இணை கமிஷனரையும், தனது உதவியாளரையும் மாமூல் வசூலிக்க நியமித்தார். பத்திரப்பதிவுத்துறையைப் பொறுத்தவரை பணி மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு குளறுபடிகளை தீர்த்து வைப்பது, வீட்டு வசதி வாரியம், அரசு புறம்போக்கு நிலங்கள், அனாதையாக உள்ள நிலங்கள் ஆகியவற்றை போலி பத்திரம் மூலம் அபகரிக்க சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வந்தன. இந்த குழுக்களை ஒருங்கிணைக்கவும், பணி மாறுதலில் பணம் வாங்கவும் ராமுரெட்டி என்பவரை நியமித்தார். இதற்காக அண்ணாநகரில் தனியா க ஒரு அலுவலகமும் செயல்பட்டு வந்தது.

இந்த துறையில் நேர்மையாக பணியாற்றிய பதிவுத்துறை ஐஜி குமரகுருபரனை சில மாதங்களிலேயே மாற்றி விட்டார். இந்த துறையில் தனக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து மாநிலம் முழுவதும் வசூலில் ஈடுபட்டு வந்தார். தமிழக பத்திரப்பதிவுத்துறையை வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என்று 4 மண்டலங்களாக பிரித்து அதற்கென அதிகாரிகளை நியமித்து வசூலித்து வந்தனர்.  சென்னையில் சைதாப்பேட்டை, நீலாங்கரை, வேளச்சேரி, சேலையூர் போன்ற முக்கிய இடங்களை பிடிக்க 3 ஆண்டுகளுக்கு ₹50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. மேலும் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை ஒரு வருடத்தில் மாற்றி விட்டு அதிக பணம் கொடுத்தவர்களை அதே இடத்துக்கு நியமித்து வந்தனர். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் குழுவே செயல்பட்டு வந்தது. அதில் மட்டுமே பல கோடி ஒவ்வொரு மாதமும் வசூலித்து வந்தனர்.

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை வளம் கொழிக்கும் துறையாகவும், பொன் முட்டையிடும் வாத்தாகவும் இருந்தது. இதனால்தான் எடப்பாடி பழனிசாமியின் மனதில் இடம் பிடிக்க, சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்தார். மணல், வெளிமாநிலங்களில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டாமல் சிமென்ட் ஏற்றி வந்தது என பல வகைகளிலும் கொள்ளையடித்து வந்துள்ளார்.இதற்கான முக்கிய ஆவணங்கள் தற்போது நடத்திய சோதனையில் சிக்கியுள்ளன. அவர் 654 சதவீதம் அதிகமாக சொத்து குவித்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும், அதை விட பல மடங்கு சொத்து குவித்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிடிபட்ட ஆவணங்களை சரிபார்க்க மட்டும் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.  டிஜிபி கந்தசாமி உத்தரவின்பேரில் ஐஜிக்கள் பவானீஸ்வரி, வித்யா குல்கர்னி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக சொத்துகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.



Tags : KC Veeramani ,Minister of Health, Education, Commerce and Registration , When he was the Minister of Health, Education, Commerce and Registration How did KC Veeramani amass wealth?
× RELATED உச்ச நீதிமன்ற அறிவிப்பு எதிரொலியால்...