×

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாட்டம்: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை: பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அரசு ஊழியர்களும் `சமூக நீதி நாள்’ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ம் தேதி, பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி (நேற்று) ஆண்டுதோறும் “சமூக நீதிநாள்” ஆக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் நாள் ஆண்டுதோறும் தலைமை செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் “சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதை பின்பற்றும் வகையில், நேற்று பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் `சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 10 மணிக்கு தலைமை செயலகம் வந்த முதல்வர், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சமூக நீதிநாள் உறுதிமொழியான, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் படிக்க அமைச்சர்கள், தலைமை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள், அனைத்து தலைமை செயலக ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திரும்ப சொன்னார்கள்.

நிகழ்ச்சியில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதையடுத்து தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆர்.ராசா, ஐ.பெரியசாமி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில்  வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அண்ணா அறிவாலய  வளாகத்தில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைக்கு முன்பு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்களும், பெரியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே  அமைந்துள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது  படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக தலைமை கழக  நிர்வாகிகள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்களும் கலந்து  கொண்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் உள்ள அவரது அலுவலகத்தில் அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் பிறந்தநாளில் உறுதிமொழி சமநிலை சமூகத்தை உங்கள் பாதையில் அமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தந்தை பெரியாரின் பிறந்த நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, இந்த நாள் சமூகநீதி நாளாக ஏற்கப்பட்டது என தெரிவித்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி, சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், அரசு துறை செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோரால் ஏற்கப்பட்டது.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது. ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன். தமிழ்நாடே எடுத்து கொண்டது. சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா.

Tags : Periyar ,Social Justice Day ,Chief Minister ,MK Stalin ,General Secretariat , Pledge acceptance under the leadership of Chief Minister MK Stalin
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு