×

சசி தரூரை ‘கழுதை’ என்று திட்டிய காங். தலைவர்: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்

ஐதராபாத்: காங்கிரஸ் எம்பி சசி தரூரை, கழுதை என்று திட்டிய தெலங்கானா காங்கிரஸ் தலைவருக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியதால், அவர் சசி தரூருடன் மன்னிப்பு கேட்டார். தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் எம்பியும், மூத்த தலைவருமான சசி தரூரை ‘கழுதை’ என்று பேசிய ஆடியோவை, ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சியின் அமைச்சர் கே.டி.ராமா ராவ் வெளியிட்டார். இந்த ஆடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. சசி தரூர் குறித்து, ரேவந்த் ரெட்டி தரக்குறைவாக கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி வெளியிட்ட பதிவில், ‘ரேவந்த் ரெட்டி - சசி தரூர் ஆகிய இருவருடனும் எனக்கு நல்ல நட்பு உள்ளது. சசி தரூர் குறித்து நீங்கள் பேசியது தவறு. அவரை பற்றி உங்களுக்கு தவறான புரிதல் இருந்தால், நீங்கள் அவருடன் பேச வேண்டும். நீங்கள் பேசிய வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் அரோரா, ‘சசி தரூர் குறித்து ரேவந்த் ரெட்டி தரக்குறைவாக கூறியதை கண்டிக்கிறேன். அவர் தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்று அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

பல மூத்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, சசி தரூரை போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டில், ‘நான் சசி தரூரிடம் பேசினேன். அவர் குறித்த, எனது கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன். எனது பேச்சால் அவருக்கு ஏற்பட்ட மனக் காயம் குறித்து என்னிடம் வருந்தினார்’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் எம்பி சசி தரூர், வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘என்னிடம் ரேவந்த் ரெட்டி பேசினார். என்னிடம் தான் கூறிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டார். அவரது வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமான இந்த நிகழ்வை மறந்துவிட்டு மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஐதராபாத் சென்றிருந்த போது, அம்மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் ஐடி துறை பிரதிநிதிகளை நிலைக்குழு தலைவரான சசிதரூர் சந்தித்தார். அப்போது அவர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி அரசை பாராட்டினார். ஆனால், சமீபகாலமாக ஆளும் தெலங்கானா அரசுக்கு எதிராக ரேவந்த் ெரட்டி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே, ஆளும் தெலங்கானா அரசை பாராட்டியதால் ஏற்பட்ட கோபத்தில், சசிதரூரை தரக்குறைவான வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.


Tags : Kang ,Sasi Tharoor ,PRESIDENT , Kang called Sasi Tharoor an 'ass'. THE PRESIDENT: He apologized for the strong opposition
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...