‘பாடி பில்டர்’ தற்கொலை முயற்சி: தற்கொலை குறிப்பில் நடிகர் மீது பரபரப்பு புகார்

மும்பை: மும்பையை சேர்ந்த பாடி பில்டர் மனோஸ் பாட்டீல் என்பவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரது தற்கொலை குறிப்பு கடிதத்தில் பாலிவுட் நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஆண் மாடலும், பாடி பில்டருமான (மிஸ்டர் இந்தியா வின்னர்) மனோஜ் பாட்டீல், தனது இல்லத்தில் அதிகளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கூப்பர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரது வீட்டை சோதனையிட்டு பார்த்த போது, அங்கு தற்கொலை குறிப்பு கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘நடிகர் சாஹில் கான் எனக்கு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சாஹில் கான், தனியார் செய்தி நிறுவனங்களிடம் கூறுகையில், ‘மனோஜ் பாட்டீலின் தற்கொலை முயற்சி விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மனோஜ் பாட்டீலுக்கும் ராஜ் ஃபௌஜ்தார் என்ற நபருக்கும் இடையே பணப் பிரச்னை இருந்தது.

காலாவதியான ஸ்டெராய்டுகளை விற்றதாக ராஜ்  ஃபௌஜ்தார் குற்றம்சாட்டி வந்தார். மனோஜ் பாட்டீலின் தற்கொலை முயற்சியானது மிகப்பெரிய மோசடி. இவ்விவகாரத்தில் மும்பை போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினால் அவர்களுக்கு ஒத்துழைப்பேன். நான் தவறு செய்திருந்தால், என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்’ என்றார். இதற்கிடையே, மனோஜ் பாட்டீலின் மேலாளர் பரி நாஸ் அளித்த பேட்டியில், ‘சாஹில் கான் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மனோஜை துன்புறுத்தி வந்தார். அவர்களது தொலைபேசி உரையாடல் ஆடியோ வைரலானது.

தனது நண்பர்களுடன் இருந்த மனோஜ், அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு சென்று, ஏதோ மாத்திரைகளை வாங்கிவந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக, ஓஷிவாரா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: