புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவில்லிபுத்தூர்: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் மலைக்கோயிலுக்கு, பக்தர்களுக்கு செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் துரித நடவடிக்கையால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால், திருவண்ணாமலை  சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் மலைக்கோயிலில், முன்னெச்சரிக்கையாக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Related Stories:

More