சுருளியாறு மின்நிலைய பகுதியில் இரவு நேரத்தில் யானைகள் உலா: பொதுமக்கள் பீதி

கூடலூர்: சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் இரவு நேரத்தில் நடமாட தொடங்கி உள்ளதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சுருளி அருவி அருகே உள்ளது சுருளியாறு மின்நிலையம். இந்த மின்நிலைய வனப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய விளைநிலங்கள் உள்ளது. இதில் வாழை, கொட்டைமுந்திரி, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட் டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்கள் இருப்பதால், அவ்வப்போது யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவுதேடி காட்டை விட்டு வெளியேறி வந்து விளைநிலத்ததை பாழ்படுத்துகிறது.

இந்நிலையில் சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வனத்திலிருந்து வெளியேறும் யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதியில் சில மணி நேரங்கள் ‘விசிட்’ அடித்துச் செல்கிறது. இதனால், மின்நிலைய குடியிருப்புவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இது மேகமலை வன உயிரின சரணாலய  பகுதியாகும். இங்கு கடந்த 40 ஆண்டுக்கு முன் இரவங்கலாறு அணை தண்ணீர் மூலம்  35 மெகாவாட் மின்சார தயாரிக்கும் மின்நிலையம் தொடங்கப்பட்டது.

இங்கு சுமார் எழுபது குடும்பங்களுக்கு மேல் உள்ளோம், இங்கு  பணிபுரிவோர் பலர் அனைத்து தேவைகளுக்கும் அருகிலுள்ள குள்ளப்ப  கவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி கம்பம், கூடலூர் பகுதிகளுக்கு சென்று  வருகின்றனர். இங்கு ஆரம்பப்பள்ளியில், குள்ளப்ப கவுண்டன்பட்டி,  கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர பயமாக உள்ளது. யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories:

More
>