திருவேற்காட்டில் இன்று காலை பயங்கரம்; வாலிபர் படுகொலை உடல் சாலையில் வீச்சு: கஞ்சா தகராறு காரணமா? போலீசார் தீவிர விசாரணை

பூந்தமல்லி: திருவேற்காட்டில் இன்று காலை தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபரின் சடலம் கிடந்தது. கஞ்சா தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த திருவேற்காடு கோலடி காந்தி சாலை பகுதியில், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கொலையானவர், திருவேற்காடு, திருவேங்கடம் நகரை சேர்ந்த சண்முகம் (37) என்பது தெரிந்தது. இவர் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார்.

இவர், இப்பகுதியில் அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றிரவு கோலடி பகுதியில் நண்பர்களுடன் குடிபோதையில் சண்முகம் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றியதில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகம் கொலை செய்யப்பட்டாரா அல்லது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் சண்முகத்துக்கும் மற்றொரு கோஷ்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் கஞ்சா ேகாஷ்டிகள் வெட்டி கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் தனிப்படை அமைத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் சண்முகத்தை கொன்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

Related Stories:

More
>