×

டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!


சென்னை : தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை , மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை டெல்டா மாவட்டங்கள் , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 19ம் தேதி டெல்டா மாவட்டங்கள் அரியலூர், பெரம்பலூர் ,கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். 20ம் தேதி தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Delta Districts , வானிலை ஆய்வு மையம்
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!