கூடலூர் அருகே ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போது அது தனது தந்தை என தெரிய வந்ததால் தீயணைப்பு வீரர் அதிர்ச்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போது அது தனது தந்தை என தெரிய வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார் அவரது மகனான தீயணைப்பு வீரர். கூடலூரை அடுத்த கோலிபாலப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரே ஆற்றில் சடலமாக கிடந்தவர்.

65 வயதான இவர் 2 நாட்களுக்கு முன் வெளியூர் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோலிபாலப்பகுதியில் ஓடும் பாண்டியாறு, புன்னங்குள ஆற்றில் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து கூடலூர் தீயணைப்பு வீரர்கள் 10 பேர் பல மணி நேரம் போராடி உடலை கயிறு கட்டி மீட்டனர். சடலத்தை ஆய்வு செய்த போது தீயணைப்பு வீரராக உள்ள பாலா என்பவரது தந்தை ராமசாமி என்பது தெரிய வந்தது.

அதிர்ச்சியில் உறைந்த தீயணைப்பு வீரர் பாலாவிற்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சடலம் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் போலீசார் ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>