×

அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அதிமுக பிரமுகர் 6.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் திரண்டு சாலைமறியல்: உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் கதறல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி அதிமுக பிரமுகர் ரூ.6.15 கோடி பணமோசடி செய்ததாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று சாலை மறியலிலும், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கவனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா சிவபிரகாசம் (49). உசிலம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன். அதிமுக பிரமுகரான இவர் உசிலம்பட்டி - மதுரை சாலையிலுள்ள கதர் உபகிளை கூட்டுறவு குடிசைத் தொழிற்சங்கத்தில் தலைவராக இருப்பதாக கூறி, அவரது அலுவலகத்திற்கு பலரையும் வரவழைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். சென்னை, பல்லடம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகிரி, சிதம்பரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த சுமார் 195 பேரிடம் இவ்வாறு கூறி, ரூ.6 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் பண மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இவருக்கு புரோக்கர்களாக பேரையூர் அரசபட்டியை சேர்ந்த டி.கல்லுப்பட்டியில் வசிக்கும் ராமசுப்பு, தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகே அப்பிபட்டியை சேர்ந்த காளிமுத்து இருந்துள்ளனர். இவர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கி ராஜா சிவபிரகாசத்திடம் கொடுத்துள்ளனர். இவர்களில் ராமசுப்பு தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், ‘‘தொ ழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், 195 பேரிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித்தர முடியவில்லை. என்னிடம் எந்த சொத்தும் இல்லை’’ என உசிலம்பட்டி நீதிமன்றம் மூலம் ராஜா சிவபிரகாசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை பெற்றுக்கொண்ட 195 பேரும் நேற்று உசிலம்பட்டி நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேம் ஆனந்த் அக். 28ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

ஆனால், அங்கு வந்திருந்த பொதுமக்கள், ``நாங்கள் பணத்தை கடனாக கொடுக்கவில்லை. எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராஜா சிவபிரகாசம் பணமோசடி செய்து நாடகம் ஆடுகிறார்’’ என்று நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி உசிலம்பட்டி - மதுரை சாலையில் ராஜா சிவபிரகாசம் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணம் வாங்கி கொடுத்த தேனி மாவட்டம், அப்பிபட்டியை சேர்ந்த காளிமுத்துவும் இந்த மறியலில் கலந்து கொண்டார். இதனைக்கண்ட மறியலில் ஈடுபட்டவர்கள் அவரை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடமிருந்து அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, ‘‘பொதுமக்கள் முறையாக நீதிமன்றத்தை நாடி தீர்வு பெற்றுகொள்ளுங்கள்’’ என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மேலும், ராஜா சிவபிரகாசம் சென்னை சென்ட்ரல் அருகே ஒரு ஓட்டலில் அலுவலகமும், மதுரை மற்றும் உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அலுவலகம் அமைத்து பொதுமக்களுக்கு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இங்கு வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் நேற்று உசிலம்பட்டியில் திரண்டு கதறி அழுதது பார்ப்பவர்களை மனம் கனக்க வைத்தது. அதிமுக பிரமுகரின் இந்த மோசடி செயலால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : AIADMK ,Usilampatti , Usilampatti, AIADMK leader, fraud
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...